டைமண்ட் பிரிசன்ஸ் கப்பலில் 13 நாட்களாக தவிக்கும் இந்திய பயணிகள்: விமானப்படை இன்று செல்கிறது

 


கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பான் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் சிக்கியுள்ள 162 இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படை விமானம் செல்லவிருப்பதாக அக்கப்பலின் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் மதுரையைச் சேர்ந்த அன்பழகன் கூறி உள்ளார்.


ஜப்பான் நாட்டின் யோகஹாமா துறைமுகத்தில் டைமண்ட் பிரின்ஸஸ் என்ற சொகுசுக் கப்பல் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த 12 நாட்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் 2500 பயணிகளும் 1200 பணியாளர்களும் சிக்கியுள்ளனர். பயணிகள் மற்றும் பணியாளர்களில் 650 பேர் மட்டுமே அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை மீட்கும் பணியை ஜப்பான் அரசு மேற்கொண்டு வருகிறது.


5 தமிழர்கள் உட்பட 162 இந்தியர்கள் அக்கப்பலில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 150-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இதன் காரணமாக அக்கப்பலிலுள்ள இந்தியர்களை உடனடியாக இந்திய அரசு மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


இந்நிலையில்  அன்பழகன் நேற்று அனுப்பிய வீடியோவில், 'என்னுடன் பணியாற்றும் திருச்சியைச் சேர்ந்த முத்து என்பவரின் மனைவி இன்று காலையில் திருச்சி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தார். அப்போது திருச்சி ஆட்சியர், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும், நாளை இந்திய விமானப்படையின் விமானம் 162 இந்தியர்களை மீட்பதற்கு ஜப்பான் செல்லவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்' என்று கூறியிருந்தார்.


இதற்கிடையே திருச்சி முத்துவின் மனைவி தேவிப்ரியாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தேன். இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்தார். மேலும் நாளை இந்திய விமானப்படையின் விமானம் ஜப்பான் செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார். இருந்தபோதும் எனது மனுவையும் இந்தியத் தூதரகத்தின் பார்வைக்கு அனுப்பிவிடுவதாகவும் கூறினார்' என்றார்.


திருச்சி மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவாதம் தங்களுக்குப் பெரும் நிம்மதி அளிப்பதாகவும், வைரஸ் பரவும் வேகம் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் இந்திய அரசு தங்களை மீட்க விரைந்து செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி