சேலம் 21 அடி காசி கால பைரவருக்கு பைரவாஷ்டமி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை.!
சேலம் மாவட்டம் தாரமங்கலத்திலிருந்து சின்னப்பம்பட்டி வழி பைபாஸ் பஸ் ஸ்டாப் இலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் மிக பிரமாண்டமாக 21 அடி ஸ்ரீ காசி காலபைரவர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் பைரவாஷ்டமி விழா முன்னிட்டு மாலை 3 மணி முதல் மகா மிளகாய் யாக பூஜை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அஷ்டபைரவர் களுக்கு பால் தயிர் மஞ்சள் திரு மஞ்சள் சந்தனம்,குங்குமம், விபூதி, இளநீர்,தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு மற்றும் சொர்னாபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 7 மணி அளவில் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஸ்ரீ காசி கால பைரவர் சக்திராஜா முனீஸ்வரர் மகா பீடம் தவத்திரு ஆறுமுக சுவாமிகள் குருஜி மாரியப்பன் சிறப்பாக செய்திருந்தார். சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் காலபைரவர் வடிவமும் ஒன்று. கால பைரவர், எதிரிகளுக்கு அச்சத்தைத் தருபவர். தன்னைச் சரணடைந்த பக்தர்களை சகல ஆபத்துகளில் இருந்தும் பாதுகாத்து, அவர்களுக்கு அனைத்து நலன்களையும் அருளக்கூடியவர். படைப்புத் தொழில் புரிவதால் தானே மும்மூர்த்தியரிலும் உயர்ந்தவர் என்று பிரம்மதேவர் கர்வம் கொண்டபோது, பிரம்மதேவரின் கர்வத்தை அடக்க, சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய கால பைரவர், பிரம்மதேவரின் ஒரு தலையைக் கொய்தார். கர்வம் யாருக்கும் இருக்கக்கூடாது என்பதற்காக சிவபெருமான் நிகழ்த்திய லீலை இது.
காசி நகரின் காவல் தெய்வமாக விளங்குபவர் கால பைரவர். சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் சந்நிதி கொண்டிருக்கும் கால பைரவர், வறுமை நிலை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கக் கூடியவர். பைரவருக்கு அஷ்டமி பூஜை மிகவும் விசேஷமானது. குறிப்பாக கால பைரவாஷ்டமி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பொதுவாக கால பைரவாஷ்டமி கார்த்திகை மாதத்தில் வரும். ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை மாதம் 11 ஆம் தேதி (27.11.21) வந்துள்ளது. இந்த நாள்தான் கால பைரவரின் ஜென்மாஷ்டமி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இலக்கியங்களில் கால பைரவாஷ்டமி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அனைத்து சிவாலயங்களிலும் கால பைரவாஷ்டமி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். குறிப்பாக காசி பைரவர் ஆலயம், இலுப்பைக்குடி சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம், சீர்காழி சட்டைநாதர் ஆலயம், வாஞ்சியத்தில் யோக பைரவர் சந்நிதி, புதுவை இடையார் பாளையம் சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் ஆகிய இடங்களில் பைரவருக்கான ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ பைரவர் ஹோமம் போன்றவை நடைபெறும். காலபைரவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
“ஆணவத்தை அழிக்க சிவபெருமான், ஸ்ரீ கால பைரவராக அவதரித்த நாளே கால பைரவாஷ்டமி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும். அந்த நாளில் திருமகளின் எட்டு வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதீகம். அதிலும் அவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும். சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது. ஸ்ரீ ஸ்ரீ பகவத்பாதாள் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பைரவ வழிபாடு தொன்மையான பிணி தீர்க்கும் வழிபாடு. ராகு கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர். 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால் இவரை வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம். 21 அஷ்டமி நாளில் பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம். காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். எனவே துன்பப்படும் எல்லா மக்களும் நாளை வரும் கால பைரவாஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி , விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா வளங்களும் பெறலாம்.
தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் சில ஆலயங்களில் சிறப்பாக ஏற்றப்படுகிறது. பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாத்துவதும் உண்டு.
பைரவ லட்சார்ச்சனை, ஶ்ரீருத்ர யாகம், ஶ்ரீபைரவ ஹோமம் போன்றவற்றில் கலந்துகொள்வது மிகவும் விசேஷம். எட்டு விதமான மலர்களால் அர்ச்சித்து, பைரவரின்
"ஓம் கால காலாய வித்மஹே
கால தீத்தாய தீமஹீ தந்நோ கால பைரவ பிரசோதயாத்:"
என்ற காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வழிபட்டால், தீராத பிணிகளும் தீரும்; கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும். எனவே, கால பைரவாஷ்டமி தினத்தில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடுவோம். அதன் பயனாக, எதிரிகளின் தொல்லை, வறுமைப் பிணி போன்ற பிரச்னைகள் எல்லாம் நீங்கி, லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் பெற்று சிறப்புற வாழலாம்'' என ஸ்ரீ காசி கால பைரவர் சக்தி ராஜ முனீஸ்வரர் மகா பீடம் தவத்திரு அருள் வாக்கு சுவாமிகள் குருஜி மாரியப்பன் கூறினார்.