திருப்பூர் ஏ.வி.பி., கல்லூரியில் 1430 மாணவிகளுக்கு பட்டம்... பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் ரூபா குணசீலன் வழங்கினார்.
திருப்பூர் ஏ.வி.பி., கல்லூரியில் இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு பட்டமளிப்பு விழாக்கள் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு பட்டமளிப்பு விழாக்கள் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த விழாக்களில் மொத்தமாக 1430 மாணவிகள் பட்டம் பெற்றனர்.
கல்லூரியின் இரண்டாமாண்டு பட்டமளிப்பு விழாவில் கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் வி.கலைச்செல்வி கலந்து கொண்டு 900 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் 27 மாணவிகள் பல்கலைக்கழக தரப்பட்டியலில் இடம் பெற்றமைக்கான பதக்கங்களை வழங்கி பாராட்டினார். மூன்றாமாண்டு பட்டமளிப்பு விழாவில் பாரதியார் பல்கலைக் கழக பதிவாளர் ரூபா குணசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 530 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். மேலும் பல்கலைக்கழக தரப்பட்டியலில் இடம்பெற்ற 16 மாணவிகளுக்கு பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார். இந்த இரண்டு பட்டமளிப்பு விழாக்களுக்கும் கல்லூரி தலைவர் ஏ.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கதிரேசன் வரவேற்புரையாற்றினார். கல்லூரி செயலாளர் லதா கார்த்திகேயன், துறைத்தலைவர்கள், பேராசியர்கள், மாணவிகள் உள்பட பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர். பட்டம் பெற வந்த மாணவிகள் ஏராளமானோர் திருமணம் முடித்து கைக்குழந்தையுடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.