முத்துநகர் கடற்கரையில், உலக தரம் வாய்ந்த நீச்சல்குளம் மற்றும் நீர் சார்ந்த விளையாட்டு பயிற்சிகள் 365 நாட்களும் நடைபெறும் - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
தூத்துக்குடி மாநகராட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி பழைய மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா, துணை மேயர் செ.ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் கலைச்செல்வி வரவேற்புரையாற்றினார்;.
முகாமில் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளில் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு சொத்து வரி நிர்ணயம், பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், தொழில் வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து கோரிக்கை மனுக்களை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கினார்கள்.
முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்:-
"தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க இந்த முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே பொதுமக்கள் மாநகராட்சி இணையதளத்தில் தங்களது பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர். அதை முறையாக பார்வையிட்டு அந்த பணிகளும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இந்த குறைதீர்க்கும் முகாம் கடந்த 14 மாதங்களாக 4 மண்டலங்களிலும் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனடிப்படையில் தொடர்ந்து இதுபோன்ற முகாம்கள் நடைபெறுகிறது. இங்கு ஏற்கனவே இதுவரை பெறப்பட்ட மனுக்கள் 794ல் 770-க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 24 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளன. பெயர் மாற்றம், முகவரி மாற்றும், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் போன்ற பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.
மாநகராட்சி பகுதி முழுவதும் பாரபட்சமின்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் கருதியே இந்த முகாம்கள் நடைபெறுவதால் மகிழ்ச்சியடைகின்றனர். ஏற்கனவே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் பெறப்படும் மனுக்களும் உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. இம் முகாமில் பெறப்பட்டு தீர்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு தீர்வாணைகளை மாநகராட்சி பணியாளர்கள் வீடு தேடி கொண்டு சேர்க்கின்றனர். இப்படி மாநகராட்சி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. ரோச் பூங்கா கடற்கரை சாலையில் தூய்மையான நடைபாதையாக 8 கிலோமீட்டம் தூரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் ஒருபுறம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் எதிர் புறம் சாலையிலும் நிறைவடையும். முத்துநகர் கடற்கரையில், உலக தரம் வாய்ந்த நீச்சல்குளம் மற்றும் நீர் சார்ந்த விளையாட்டு பயிற்சிகள் 365 நாட்களும் நடைபெறும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று டபிள்யூஜிசி சாலையில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் நலனும் அவர்களது ஆரோக்கியமும் மாசு இல்லாத மாநகரமும் உருவாக வேண்டும். அதற்கேற்றாற்போல் தான் மாநகராட்சி நிர்வாகம் பணியாற்றி வருகிறது. மழைக்காலம் துவங்கி விட்ட நிலையில் கடந்த காலத்தில் ஏ.வி.எம் மருத்துவமனை மண்டல அலுவலகம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிழக்கு மண்டலத்தை பொருத்தவரை குப்பைகளை மக்கள் தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். நாம் ஒவ்வொரு முறையும் மக்களுக்கு முக்கிய வேண்டுகோளாக வைப்பது பிளாஸ்டிக் பைகளை மக்கள் தவிர்க்க வேண்டும் மாநகராட்சி சார்பில் வியாபாரிகள் இடத்தில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கேரி பேக் பயன்பாட்டை தடுத்து வருகிறோம். தூய்மையான பசுமையான மாநகரை உருவாக்க அனைவரும் மாநகராட்சி நிர்வாக நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எல்லா பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி பணிகள் நடைபெறும் " என்று பேசினார். பின்னர் பிறப்பு, இறப்பு பெயர் மாற்றம் என 5 பேருக்கு உடனடியாக ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணக்குமார், உதவிஆணையர் வெங்கட்ராமன், பொறியாளர் தமிழ்செல்வன், உதவி பொறியாளர் சரவணன், நகரமைப்பு திட்ட உதவி செயற் பொறியாளர்கள் காந்திமதி, முனீர்அகமது, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் ஜான்சிராணி, பேபி ஏஞ்சலின், ரெக்ஸ்லின், மரியகீதா, எடின்டா, தனலட்சுமி, ராமு அம்மாள், மும்தாஜ், சுகாதார ஆய்வாளர் நெடுமாறன், இளநிலை பொறியாளர்கள் பாண்டி, அமல்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், திமுக வட்ட செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட பொதுமக்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.