அமைச்சர் உத்தரவை மதிக்காத ஓட்டுனர் - நடத்துனர் : மதுரை - தூத்துக்குடி வழித்தடத்தில் அனுமதிக்கப்படாத நெடுஞ்சாலை ஹோட்டலில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்தால் பயணிகள் அவதி.!
அரசு பேருந்துகளை அரசால் ஒதுக்கப்பட்ட நெடுஞ்சாலை ஹோட்டல்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்பதை மீறி அலட்சியமாக, விருப்பமான ஹோட்டல்களில் பேருந்துகளை நிறுத்தும் ஓட்டுநர்கள்- நடத்துநர்களால் உணவகங்கள் மோசமானதாக இருப்பதாகவும், அந்த ஓட்டல்களில் விலை மிகவும் அதிகமாகவும் உள்ளதாகவும் பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்தன. இப்படி பல்வேறு பிரச்சினைகள் உருவானதைத் தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு இதுதொடர்பாக, விழுப்புரம் விக்ரவாண்டி பகுதியிலுள்ள குறிப்பிட்ட ஐந்து உணவகங்களில் மட்டும் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது.
அந்த உணவகங்கள் போல பல உணவகங்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்ததையடுத்து, அரசுப் பேருந்துகள், குறிப்பிட்ட உணவகங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறையும் உத்தரவிட்டிருந்தது.
அந்த லிஸ்டில் மதுரை தூத்துக்குடி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் மேலக்கரந்தை நெல்லை ஆரியாஸ்...தூத்துக்குடி மதுரை வழித்தடத்தில் ரமேஷ் ஹோட்டல் மேலக்கரந்தை ஆகிய இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருந்த நிலையில் செப்டம்பர் 18 அதிகாலை சுமார் ஒரு மணியளவில் மதுரை (மாட்டுத்தாவணி) MGR பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி கிளம்பிய பதிவு எண் TN72N2369 பேருந்து அருப்புக்கோட்டை அருகே அரசால் அனுமதிக்கப்படாத ஹோட்டலில் நிறுத்தியதால் பயணிகள் அதிக விலை கொடுத்து டீ, காபி, குளிர்பானங்களை வாங்கியதுடன், கழிவறை வசதிக்காக அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இருட்டான பகுதியில் செல்ல வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டதையடுத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்ததுடன் தங்கள் அதிருப்தியையும் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன்னர் கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கரூர் வழியாக அரியலூருக்கு சென்று கொண்டிருந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர். கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாயனூர் சுங்க சாவடி அருகே அரசு பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல்களில் நிறுத்தாமல் தங்கள் விருப்பத்துக்குரிய ஹோட்டல்களில் அரசு பேருந்துகளை ஓட்டுநர்கள்- நடத்துநர்கள் நிறுத்தியிருப்பதை கவனித்த அமைச்சர் சிவசங்கர் காரை விட்டு இறங்கி ஹோட்டலுக்குள் சாப்பிட சென்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வரும் வரை அரசு பேருந்துகள் முன்பாக சாதாரண பயணியைப் போல காத்திருந்தார்.
அரசு பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் அங்கு வந்தவுடன், ” ஏன் பேருந்தை இங்க நிறுத்தி இருக்கிறீர்கள்?”“இப்படி உங்கள் விருப்பத்திற்கு பஸ்ஸை நிறுத்தினால் அரசு பதில் சொல்லுமா அல்லது நீங்கள் பதில் சொல்வீர்களா, நீங்கள் செய்யும் தவறுக்கு அரசு பதில் சொல்ல வேண்டியிருக்கும்” என கடும் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பிறகும் அமைச்சரின் எச்சரிக்கையை காற்றில் பறக்க விட்டு விதிமீறும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையேல் ஏதும் அசம்பாவிதம் நடந்தால் அரசுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்