மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

 

மணிமுத்தாறு அருவியில் குளித்த நபருக்கு ஆபத்தான நோய் கிருமி தொற்று ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி ராம்நகர் 5 ஆவது தெருவில் வசித்து வந்தவர் 50 வயதான ராமச்சந்தின், மனைவி பெயர் கோமதி. இவருக்கு ஷ்யாம் (23) , தாரிணி (14) என இரு குழந்தைகள் உள்ளனர். நிறுவனங்களுக்கு வரி ஆலோசகராக செயல்பட்டு வந்த இவர் கடந்த அக்டோபர் 10ம் தேதி குடும்பத்தினருடன் மணிமுத்தாறு அருவிக்கு குளிக்க சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவருக்கு இரண்டு நாட்களாக தலைவலி இருந்து வந்த நிலையில் அக்டோபர் 15ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு நாட்களில் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் மாத்திரைகளை சாப்பிட்டு வந்த அவர், தொடர்ந்து காய்ச்சல், தலைவலி வரவே 17ம் தேதியன்று தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளார்.  தொடர்ந்து காய்ச்சல் வந்து கொண்டே இருந்ததால் 19ம் தேதி மீண்டும் மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள் "வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் 5 நாட்களுக்கு பிறகு காய்ச்சல் குனமாகி விடும்" என கூறியுள்ளனர்.

சிகிச்சையின் போது 

24ம் தேதி வரை காய்ச்சல் தொடரவே அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை அதே மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். 24ம் தேதி இரத்த மாதிரிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதில் ஆபத்தான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அதே வேளையில் காய்ச்சல் குறையாமல் தொடந்து வந்த நிலையில் அவருக்கு கண் பார்வை மங்குதல், கண்களில் வீக்கம், தன்னிலை மறத்தல் என அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது இரத்த மாதிரிகளை மீண்டும் சோதனைக்கு (Culture Test) அனுப்பி 72 மணி நேர பகுப்பாய்வுக்கு பின்பு 29ம் தேதி வந்த அறிக்கையை பார்த்த மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. 

பர்கோல்டேரியா சூடோமல்லி (Burkholderia pseudomallei) என்னும்  99% உயிர் பிழைக்க வாய்ப்பில்லாத ஆபத்தான ஆட்கொல்லி பாக்டீரியா தாக்குதல் ஏற்பட்டுள்ளதை கண்ட மருத்துவர்கள், இது போன்ற நோய்க்கு இதற்கு முன் நாங்கள்  சிகிச்சையளித்த அனுபவம் இல்லை என கைவிரித்து விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். தீடீர் மரணம் அவரது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய அவரது மகன் ஷ்யாம் :- "மணிமுத்தாறு அருவியில் எல்லோரும் உற்சாகமாக குளிக்க சென்றோம், வந்த பின்னர் தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்த நிலையில் சிகிச்சைக்காக பிரபல மருத்துவமனையை நாடினோம், ஆனால் அவர்கள் கடைசியில், இது இதுவரை நாங்கள் கண்டேயிராத நோய் என்று கை விரித்து விட்டனர். இது எந்த வகையான நோய் என்று கண்டுபிடிக்கவே இரண்டு வாரங்கள் ஆகி விட்டது, கண்டுபிடித்த பின்பு இது எங்களுக்கு புதிது என சொல்லி விட்டனர். எப்படி சிகிச்சையளிப்பது என தினறினர், அவருக்கு சர்க்கரை நோயும் இருந்தது, அடுத்த இரண்டு மூன்று நாட்களில் எல்லாமே முடிந்து விட்டது, நாங்கள் தூத்துக்குடியில் இருந்து மதுரை மீனாட்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்று எப்படியாவது மீட்டு விடலாம் எனும் பெரும் நம்பிக்கையில் சென்றோம், ஆனால் பிணமாகத்தான் எடுத்து வந்தோம் " என சோகத்துடன் கூறினார். 

ஷ்யாம்

இது தொடர்பாக மருத்துவமனை தலைவர் மருத்துவர் லெட்சுமணன் கூறுகையில்:- இது அரிதிலும் அரிதான பாக்டீரியா, எங்களுடைய 40 வருட மருத்துவ அனுபவத்தில் இப்போதுதான் இந்த பாக்டீரியா தாக்குதலுக்கு உள்ளான நபரை பார்க்கிறேன், இது மிகவும் ஆபத்தான (High Mortality) ஆட்கொல்லி பாக்டீரியா, இது தொற்றினால் 99% மரணம் உறுதி என்றவர், இது போன்ற தொற்று பாக்டீரியாக்களை  தடுக்க பொதுமக்கள் அருவி, ஆறு, போன்றவற்றில் குளித்தாலும் வீட்டிற்க்கு வந்தவுடன் சோப்பு போட்டு குளித்து உடலை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும், தேங்கியுள்ள தண்ணீரில் குளிப்பதையோ, கால் நனைப்பதையோ பெரும்பாலும் தவிர்க்க வேண்டும், இது அதிகமாக சர்க்கரை நோயுள்ளவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையும் எளிதில் தாக்கக் கூடியது என்றார்.

இது குறித்து நம்மிடம் பேசிய அதே மருத்துவ மனையின் மூத்த நுண்ணுயிரியல் மருத்துவர் கலைவாணி:-

"மெலியோய்டோசிஸ் சில நரம்பு வழி நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் அபூர்வமாக  குணப்படுத்தக்கூடியது என்றாலும், நோயாளிகளுக்கு உதவ சரியான நேரத்தில் சரியான நோயறிதலைச் செய்வது கடினம். இந்த பாக்டீரியா தாக்குதலுக்கு உள்ளான நபரின் பகுப்பாய்வை தனது மருத்துவ அனுபவத்தில் இப்போது தான் பார்த்துள்ளேன், எங்களது மருத்துவமனையில் நவீன ஆட்டோமேட்டிக் கருவியால் மூன்று நாட்களில் இதனை துல்லியமாக கண்டறிய முடிந்தது, வேறு இடங்களில் குறைந்தது 7 நாட்களாகும் என்றவர், இரத்த பகுப்பாய்வு அறிக்கையை பார்த்தவுடன் முதலில் அதிர்ச்சியடைந்ததாகவும், அவரை நேரில் சந்தித்து அவரின் நடவடிக்கைகள் மற்றும் நோய் பாதிப்பு குறித்து மேலதிக விபரம் தெரிந்து கொள்ள முயன்றேன், பணி நிமித்தமாக செல்ல முடியவில்லை, அவர் இறந்து விட்டார் என்ற தகவல் வேதனை தருகிறது" என்றார்.

பெரும்பாலான மருத்துவர்களின் கூற்றுப்படி பர்கோல்டேரியா சூடோமல்லி  (Burkholderia pseudomallei) என்ற பாக்டீரியா , மெலியோய்டோசிஸ் எனப்படும் ஒரு நோயை ஏற்படுத்தும் , இது உலகளவில் பெரும்பாலான ஆய்வுகளில் மிகவும் ஆபத்தானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலம் நீர் மற்றும் மண் போன்ற இயற்கை நீர்த்தேக்கத்திலிருந்து மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் நேரடி தொடர்பு மூலமாகவோ அல்லது மாசுபட்ட இரண்டாம் நிலை நீர்த்தேக்கங்கள் மூலமாகவோ அல்லது தண்ணீருடன் உள்ளிழுத்தல், உட்கொள்ளல் அல்லது தடுப்பூசி மூலம் தொடர்பு கொள்வதன் மூலம் ஏற்படுகிறது என்கின்றனர். இது இந்தியாவில் குறைவாகவே அங்கீகரிக்கப்பட்ட ஆட்கொல்லி தொற்று நோயாகும் என்கின்றனர்.

இந்த நோய் முதன்முதலில் 1912 ஆம் ஆண்டில் பர்மாவில் நிமோனியாவின் தொடர்ச்சியான நிகழ்வுகளைக் கவனித்த பிறகு விட்மோர் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோரால் அடையாளம் காணப்பட்டது. 1950 ஆம் ஆண்டில், மெலியோய்டோசிஸின் முதல் பதிவு ஆஸ்திரேலியாவின் டவுன்ஸ்வில்லில் ஆவணப்படுத்தப்பட்டது, துரதிர்ஷ்டவசமாக  நோயாளி செப்டிசீமியாவால் இறந்தார். முதலில் ஆஸ்திரேலியாவில் தோன்றி பின்னர் ஆசியா முழுவதும் பரவி, உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில் மேலும் பரிணாம வளர்ச்சியடைந்து பரவலுக்கு உட்பட்டன.

வடக்கு ஆஸ்திரேலியா, கடலோர இந்தியா மற்றும் வடகிழக்கு தாய்லாந்தில் மெலியோய்டோசிஸ் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல தென்கிழக்கு ஆசியாவில் வளரும் நாடுகள் முழுவதும், இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றின் கடலோர மற்றும் துணைக் கடற்கரைப் பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க குறைவான அளவே பதிவாகியுள்ளன.

இந்தியாவில் பர்கோல்டேரியா சூடோமல்லியின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குறைவாகவே உள்ளது, கடலோரப் பகுதிகள் அல்லாத பகுதிகளிலிருந்து தரவுகள் குறைவாகவே உள்ளன. மதுரை வேலம்மாள் மருத்துவமனை மேற்கொண்ட ஒரு ஆய்வில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் ஐந்து மெலியோய்டோசிஸ் நோயாளிகளின் வீடுகளைச் சுற்றி 30 செ.மீ ஆழத்தில் இருந்து மொத்தம் 50 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பி. சூடோமல்லியின் TTS1 மரபணுத் தொகுப்பை இலக்காகக் கொண்டு வழக்கமான PCR ஐப் பயன்படுத்தி மண் டி.என்.ஏ பிரித்தெடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது . பரிசோதிக்கப்பட்ட 50 மண் மாதிரிகளில் இரண்டு (4%) PCR ஆல் பி. சூடோமல்லை positive இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளன.

தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற தென் மாநிலங்களில் மருத்துவ விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மிகக் குறைவாகவே உள்ளதால் இது போன்ற ஆட்கொல்லி பாக்டீரியா பற்றிய விழிப்புணர்வு சுகாதரத்துறையிடமும் , மருத்துவர்கள் மற்றும் பொது மக்களிடம் குறைவாகவே உள்ளது. மூத்த மருத்துவர்களே இந்த பாக்டீரியா பாதிப்பு குறித்து வியப்பு தெரிவித்ததுடன் இது சம்பந்தமான வழக்குகளை தங்கள் அனுபவத்தில் கண்டதேயில்லை என்கின்றனர்.

2025 ஜனவரியில் எடுத்த ஒரு தரவுகளின் படி தமிழ்நாட்டில் இதுவரை 210 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 57% பேர் சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என தெரிவிக்கின்றது. கர்நாடகாவில் 499 ,கேரளாவில் 58, புதுச்சேரியில்79, தெலுங்கானா 36, மஹாராஷ்ட்ரா 10, கோவா  7, பீஹார் 5, என நோய் பதிவுகளை காண்பிக்கின்றன.

இந்த நோய் கண்டறிதலில் உள்ள சிக்கல் என்னவென்றால் இந்த பாக்டீரியா சுமார் 10 நாட்களுக்கு பிறகே இரத்த பகுப்பாய்வு பரிசோதனையில் தெரிய வருகிறது. இதனால் பெரும்பாலான மருத்துவர்கள் இதனை வைரல் காய்ச்சல் என்று வகைப்படுத்தி நகர்ந்து விடுகின்றனர். அப்படியே அவர் இறந்து விட்டாலும் அதனை நிமோனியா காய்ச்சல் என வகைப்படுத்தி விடுவதால், இந்த நோய் பற்றிய தரவுகள் , அதனால் ஏற்படும் மரணங்கள் குறைவாகவே பதிவாகியுள்ளன. 

இவர் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனை கூட இதனை வழக்கமான ஒரு மரணமாகவே பார்த்ததேயொழிய , இதன் ஆபத்து அறிந்து, மேலும் பரவலை தடுக்க இதனை சுகாதாரத் துறையின் கவனத்திற்க்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் அலட்சியமாக கடந்து சென்றுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத் துறை உடனடியாக தலையிட்டு மரணம் குறித்து விரிவான விசாரனைக்கு உத்தரவிடுவதுடன், சம்பந்தப்பட்ட பகுதிகளின் நீர், மண், போன்றவற்றில் பாக்டீரியா பாதிப்பு உள்ளதா, மேலும் மக்கள் பாதிக்கும் வாய்ப்புள்ளதா என ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும் என மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். 

#Tuticorin #Thoothukudi #தூத்துக்குடி #TamiraParani #தாமிரபரணி #மணிமுத்தாறு



Popular posts from this blog

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!