எஸ்.ஆர்., நகரில் குப்பைக்கிடங்கு அமைத்தால் போராட்டம் நடத்துவோம் - மாநகராட்சி அலுவலர்களுடனான அமைதிக்கூட்டதில் பொதுமக்கள் எச்சரிக்கை


திருப்பூர் மாநகராட்சி 60 வது வார்டுக்குட்ப்பட்ட எஸ்.ஆர்., நகர் பகுதியில் குமரன் கல்லூரி பின்புறம் திருப்பூர் மாநகராட்சி சார்பில் குப்பை உரக்கிடங்கு அமைக்க மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டது. இதற்கான முதற்கட்ட பணிகளை மாநகராட்சி அலுவலர்கள் துவக்கினர். 
 ஆனால், அந்த பகுதி பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று (வெள்ளி) முருகம்பாளையத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அமைதிக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் கண்ணன், தெற்கு காவல் உதவி ஆணையர் நவீன், மாநகராட்சி நகர் நல அலுவலர் பூபதி, உதவி பொறியாளர்  திருநாவுக்கரசு, சுகாதார அலுவலர் ராஜேந்திரன், குடிநீர் ஆய்வாளர்கள் மூர்த்தி, மோகன்ராஜ் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம், 'குப்பைக்கிடங்கால் எந்த இடையூறும் வராது' என கூறி பேசினார்கள். ஆனால் மறுதரப்பில் பொதுமக்கள் அந்த பகுதியில் குப்பைக்கிடங்கு அமைக்க கூடாது என்பதை கடுமையாக வலியுறுத்தினர். இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போது, உதவி ஆணையர் கண்ணனுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. உதவி ஆணையர் கண்ணன் பொதுமக்களிடம், 'இந்த வார்டுக்குள்ளான குப்பைகளுக்காக வேறு எங்கு அமைக்க முடியும், இங்கு தான் கிடங்கு அமைக்கப்படும்' என கூறினார். ஆனால் அதற்கு பொதுமக்கள் ஒத்துக்கொள்ளவில்லை. எஸ்.ஆர்., நகர் பகுதியில் குப்பைக்கிடங்கு அமைத்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர். 
 இதையடுத்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலர்கள், 'அமைதிக்கூட்டம் நடத்தி, பொதுமக்களிடம் குப்பைக்கிடங்கு அமைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என விளக்கி கூறப்பட்டதாக' எழுதி, அதற்கு கூட்டத்துக்கு வந்தவர்களிடம் கையெழுத்து கேட்டனர். ஆனால், பொதுமக்கள் கையெழுத்து போட மறுத்தனர். குப்பைக்கிடங்கு அமைத்தால் நிச்சயம் போராட்டம் நடத்துவோம் என கூறி களைந்து சென்றனர். 
இந்த கூட்டத்தில், அன்பகம் திருப்பதி, கருவம்பாளையம் மணி, நாராயணன், தனபால், கேசவன், கலைச்செல்வன், சிவசங்கர், மனோகரன், மெர்குரி ஈஸ்வரன், ரமேஷ்குமார், மகேஷ்குமார், முத்து, மும்பை கணேஷ், தங்கவேல், முருகன், சக்திவேல், உள்பட பொதுமக்கள் பங்கேற்றனர். 


 

 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்