ஊழலை வெளிக்கொண்டு வந்த பெண் அதிகாரி பணியிட மாற்றம்: கேரளத்தில் தான் இந்த கொடுமை

ஊழலை வெளிகொண்டு வந்த பழங்குடி பெண் அதிகாரி, பணியிட மாற்றம் செய்த விவகாரம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியைச் சேர்ந்தவர் சாந்தாமணி. பழங்குடி இனத்தைச் சேர்ந்த சாந்தாமணி, கேரள மாநில அரசின் பால்வளத்துறையில் டி.ஓ (Directory officer)-ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அட்டப்பாடியில் உள்ள ஓர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.ஏழு கோடிக்கு ஊழல் நடந்துள்ளதை சாந்தாமணி கண்டுபிடித்துள்ளார். இதனால், கூட்டுறவு சங்கத்தில் உள்ள அதிகாரிகளும், ஆளும் சி.பி.எம் பிரமுகர்களும், சாந்தாமணிக்கு எதிரான செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.


சாந்தாமணிக்கு எதிராக பல்வேறு பொய் புகார்களை மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து, ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சாந்தாமணியை ஆலத்தூர் பகுதிக்கு பணி இடமாற்றம் செய்துள்ளது கேரள அரசு. இது பழங்குடி மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாந்தாமணியை மீண்டும் அட்டப்பாடிக்கே மாற்ற வேண்டும் என்று நாளுக்கு நாள் போராட்டம் வலுத்துவந்த நிலையில், பழங்குடி மக்கள், தாய்குல சங்கம், கேரள அ.தி.முக. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து பேரணியாக வந்து பாலக்காடு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.


இதுகுறித்து பழங்குடி மக்கள் சிலரிடம் பேசியபோது, “சாந்தாணி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, B.Tech Diary Devalopment படிப்பை வெற்றிகரமாக முடித்தார். அந்தப் பட்டப்படிப்பை முடித்த, முதல் கேரள பழங்குடி பெண் சாந்தாமணிதான். பல்வேறு சோதனைகளைக் கடந்துதான் அவருக்கு பணியும் கிடைத்தது. ஆனால், பழங்குடிப் பெண் என்பதாலேயே பணியில் சேர்ந்தப் பிறகும் அவருக்கு சோதனைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.


ஊழலை வெளிகொண்டு வந்ததால், அதிகாரிகளும், ஆளுங்கட்சி பிரமுகர்களும் சாந்தாமணிக்கு எதிராக அரசியல் விளையாட்டில் இறங்கினார்கள். எங்களது பழங்குடி மக்களிடம் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கி, அதில் சாந்தாமணி குறித்து பொய் புகார்களை அனுப்பினார்கள். சாந்தாமணிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் எட்டு மாத கை குழந்தையும் ஒன்று. அவரின் உடல்நிலையிலும் சிறிய சிறிய பாதிப்புகள் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் கவனத்தில் எடுக்காமல், சாந்தாமணியை பணியிட மாற்றம் செய்துவிட்டனர்.


கூட்டுறவு சங்க ஊழல்வாதிகள், இப்போதும் அதே ஊழலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாந்தாணி தற்போது மெடிக்கல் லீவில் இருக்கிறார். அவரது பணியிட மாற்றத்தை எதிர்த்து நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. ஊழல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், சாந்தாமணியை மீண்டும் அட்டப்பாடிக்கே மாற்ற வேண்டும்” என்றனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!