லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போதே சோதனைச் சாவடியில் லஞ்சம் கொடுத்த கனிமவள கும்பல்.!


கனிமவள லாரிகளை சோதனையிடாமல் அனுப்ப உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு என சோதனை சாவடி போலீசார் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் கூறியதாக அதிர்ச்சி தகவல். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் 500 முதல் 600 வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக அமைந்து வருகிறது.

இதனை தடுக்க பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் குமரி மாவட்டத்தில் கனிம வளம் கடத்தல் படு ஜோராக நடைபெறுகிறது.

அதற்கு காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உட்பட பலர் உடந்தையாக செயல்பட்டு வருவதாகவும், மேலும் அரசியல்வாதிகள் பலரும் கனிம வள கடத்தல் கும்பலுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கனிம வள கடத்தல் கும்பலுக்கு ஆதரவாகவே தக்கலை காவல் உட்கோட்ட பதவி தரம் இறக்கப்பட்டது என்பதும் அவர்களின் குற்றசாட்டு. ஏற்கனவே தக்கலை உட்கோட்ட பகுதி என்பது மாநில எல்லைகளை உள்ளடக்கிய பல சோதனை சாவடிகள் மற்றும் கனிமவளம் கடத்தல் உட்பட வளம் கொழிக்கும் பகுதியாகும். தக்கலை உட்கோட்ட பகுதியில் பணியாற்ற 40, 50 லட்சங்கள் என கடந்த காலத்தில் ஏலம் விடப்பட்டு பணியிடம் பெரும் போட்டியாக நிலவி வந்தது. 

அனைத்து விதமான கடத்தல் களுக்கும் வாயிலாக குமரி மாவட்ட எல்லையோர பகுதி சோதனை சாவடிகள் செயல்பட்டு வருவதால் தக்கலை உட்கோட்ட காவல் பணியிடம் தரம் உயர்த்தப்பட்டு ஐபிஎஸ் மற்றும் நேரடி டிஎஸ்பி பணியிடமாக மாற்றப்பட்டது. ஆனால் தற்போது கனிம வள கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக தக்கலை உட்கோட்ட காவல் பணியின் தரம் இறக்கப்பட்டு பதவி உயர்வில் வரும் டிஎஸ்பிக்கள் பணியாற்றும் விதமாக மாற்றப்பட்டு உள்ளது. இதை முக்கிய லஞ்சம் வாங்கும் காவல் உயரதிகாரிகள் பரிந்துரை செய்யப்பட்டு பதவி உயர்வில் வரும் டிஎஸ்பிக்கள் பணியிடமாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கனிமவள மாபியா கும்பல்கள் கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவுக்கு தொடர்ந்து கடத்தி வந்தது பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அவற்றையெல்லாம் அடக்கி உயர் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை கொடுத்து அரசியல்வாதிகளை கைக்குள் வைத்துக்கொண்டு தங்கள் லஞ்ச சாம்ராஜ்யத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் புதிதாக கடந்த சில மாதங்களுக்கு முன் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பியாக பதவியேற்ற பீட்டர் பால் அதிரடி நடவடிக்கையாக சோதனைச் சாவடிகளில் சோதனையிட முடிவு செய்து ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலும் களியக்காவிளை சோதனைச்சாவடியில் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலும் காலை முதல் சோதனை நடைபெற்றது. 

இரு இடங்களில் நடத்திய சோதனைகளிலும் பல ஆயிரக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது குறித்து ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில் களியக்காவிளைசோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திக் கொண்டு இருக்கும்போதே சோதனை சாவடியை கடந்து கேரளா மாநிலத்திற்குள் செல்ல வந்த கனிமவள கடத்தல் லாரிகள் சோதனைச் சாவடி அருகே கனிம வள கடத்தல் லாரிகளை நிறுத்தி லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையிலேயே லஞ்சம் கொடுத்த சம்பவம் அரங்கேறி தமிழக போலீசாருக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் சோதனைச்சாவடியில் சிசிடிவி பதிவுகள் இருந்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் சிசிடிவி பதிவுகளை தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

இவ்வாறு இருக்க தொடர்ந்து கனிம வள கடத்தல் லாரிகள் கனிமவளம் கேரளாவுக்கு கொண்டு செல்ல கல் குவாரிகளுக்கு அணிவகுத்து சென்று கொண்டு இருக்கின்றன. லஞ்சம் வாங்கும் உயர் அதிகாரிகளால் தான் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள லாரிகள் சோதனைச் சாவடிகளை கடந்து சர்வசாதாரணமாக கேரளாவுக்கு சென்று வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தற்போது சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கிய லஞ்சப் பணத்தில் மூலமாக உண்மையாகி உள்ளது. 

மேலும் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போலீசாரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானதாக கூறப்படுகிறது. உயரதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு படி தான் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள லாரிகளை தாங்கள் தடுக்கவில்லை என்றும் அவ்வாறு தடுத்தால் தங்களை ஆயுதப்படைக்கு மாற்றி பழி வாங்குவதாக கூறியதாகவும் அதை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வீடியோவாக பதிவு செய்து கொண்டதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தற்போது லஞ்ச ஒழிப்பு துறை தொடங்கியுள்ள அதிரடி சோதனை மூலம் குமரி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை மணியாகவே அமையப் பெற்றுள்ளது என்றால் மிகையல்ல. வரும் நாட்களில் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை லஞ்சம் பெற்று வரும் அதிகாரிகளை களையெடுக்கும் பணிகளை அதி வேகமாக தொடரும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!