கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.!
தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில், மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். நவம்பர் 1ஆம் தேதி, ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
தினசரி பாதிப்பு ஆயிரத்து 200க்கும் கீழ் குறைந்துள்ளதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்தும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் பொது இடங்களில் கூட்டத்தை தவிர்ப்பது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். குறிப்பாக அரசியல், சமுதாய மற்றும் கலாசார நிகழ்வுகள் நடத்துவதற்கான தளர்வுகள் அளிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காத வகையில், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்துவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.