கூலி உயர்த்துவதில் தொடரும் இழுபறி: விசைத்தறியாளர்கள் 2000 பேர் ஆர்ப்பாட்டம்

ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டு திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் அவிநாசி அருகே உள்ள தெக்கலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் சுமார் மூன்று லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றது.  இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

 ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு நூல் வாங்கி அதனை காடா துணியாக உற்பத்தி செய்து கொடுப்பது இவர்கள் வேலை. அதற்கான கூலி நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் கூலி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு 7 ஆண்டுகளாக விசைத்தறிகளுக்கான கூலி உயர்வு முழுமையாகக் கிடைக்கவேயில்லை. வெகுவாக உயர்ந்துவிட்ட விலைவாசி உயர்வால் இத்தொழிலை கைவிட்டுவிட்டு பலபேர் வேறு தொழிலை தேடியும், இத்தொழிலுக்காக வாங்கிய கடனைச் செலுத்த வழியின்றி சொத்துக்களை இழந்து தவித்து வருகின்றனர்.

  கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து புதிய கூலி உயர்வுக்கான கோரிக்கை வைத்து ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.  அதன் பிறகு 24.11.2021 அன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாநில அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளாலும் அறிவிக்கப்பட்ட பல்லடம் ரகத்திற்கு 20% சோமனூர் ரகத்திற்கு 23% என கூலி உயர்த்தப்பட்டது.

ஆனால், அதை அமல்படுத்தாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் காலம் தாழ்த்தி வருவதாக கூறி அதை கண்டிக்கும் வகையிலும் அரசு அறிவித்தபடி கூலி உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் கடந்த 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஈடுபட்டு 23-வது நாளாக இன்று வரை தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் சுமார் மூன்று லட்சம் விசைத்தறிகள் இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 60 கோடி ரூபாய் என இதுவரை 1,380 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.  இதில் நேரடியாக மூன்று லட்சம் தொழிலாளர்களும் மறைமுகமாக இரண்டு லட்சம் தொழிலாளர்களும் என சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை தொழிலாளர் நலத்துறை ஆணையத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.  இதனை தொடர்ந்து இன்று அவிநாசியை அடுத்துள்ள தெக்கலூரில் ஜவுளி உறபத்தியாளர்களை கண்டித்து திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர், மங்கலம், பல்லடம், சோமனூர், 63 வேலம்பாளையம் மற்றும் கண்ணம்பாளையம் என 9 சங்கங்களை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இப்போராட்டத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இவர்களுக்கு ஆதரவாக விவசாய சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். வரும் 27ம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.  இதிலும் தீர்வு எட்டப்படாவிட்டால் வீடுகள் மற்றும் விசைத்தறிக்கூடங்களில் கறுப்புக்கொடி ஏற்றப்படும் என்றும், அதையடுத்து தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடைபெறும் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!