தூத்துக்குடியில் 28வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் - ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட அரசு செவிலியர் கல்லூரியில் 28வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், இன்று தொடங்கி வைத்து, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் 28வது கரோனா மெகா தடுப்பூசி முகாம் வரும் 30.04.2022 (சனிக்கிழமை) அன்று மொத்தம் 763 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள்,
சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் ஆகிய முக்கிய இடங்களில் 763 முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 50 சிறப்பு முகாம்கள் மற்றும் பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் 713 இடங்களிலும் தகுதியான அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை 18 வயதிற்கு மேற்படட நபர்களில் முதல்தவணை 1306447 (95சதவீதும்) நபர்களுக்கும், இரண்டாம் தவனை 980059(70.6%) நபர்களுக்கும் மற்றும் ஊக்க தடுப்பூசி 6883 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
15 முதல் 18 வயதுடையவர்களில் முதல் தவணை 7879 ( 97%) நபர்களுக்கும், இரண்டாம் தவணை 62800 (77.3%) நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 12-14 வயதுடைய குழந்தைகளில் முதல் தவணை 36011 (70%) குழந்தைகளுக்கும் இரண்டாம் தவணை 12245 (24%) குழந்தைகளுக்கும் போடப்பட்டுள்ளது.
இம்மையங்களில் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ளலாம். மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்த 18 வயதிற்மேற்பட்டவர்கள் ஊக்க தடுப்பூசி செலுத்திகொள்ளலாம்.
தடுப்பூசி மையங்களில் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள், வருவாய் துறை, ஊரக மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவுப்பணியாளர்கள், தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை, தன்னார்வலர்கள், காவல்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலதுறை அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கரோனா தடுப்பூசி மையங்களில் மதியம் வரை தடுப்பூசி செலுத்தாவர்களுக்கு, அப்பகுதி மையங்களில் உள்ள செவிலியர்கள் வாயிலாக வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.
சிறப்பு முகாம்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளிகளுடன் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதற்கு
தேவையான ஆவணங்கள் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் கொண்டு வந்து பதிவு செய்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நாளைய தினம் (01.05.2022) 403 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. கிராமசபை கூட்டம் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத்துறை அலுவலர்கள், முன்னிலையில் நடைபெறுகிறது.
பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து கிராம வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என ஆட்சியர் தெரிவித்தார்.
முகாமில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) எஸ்.பொற்செல்வன், கோட்டாட்சியர் சிவ சுப்பிரமணியன்,
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கார்த்திக்கேயன், இளங்கோவன், மாநகராட்சி நல அலுவலர் அருண்குமார், துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலர் ஜெ.சைலஸ் ஜெபமணி, குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் குமரன், மருத்துவர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.