பிஎப்ஐ, எஸ்டிபிஐ மீதான என்ஐஏ சோதனை..பழிவாங்கும் நடவடிக்கை..வைகோ கண்டனம்.!


சென்னை: நாடு முழுவதும் உள்ள பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ ஆகிய அமைப்புகள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட என்ஐஏ சோதனைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அமைப்புக்களின் மீதான மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை கை விட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அண்மைக் காலமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை ஆகியவைகளின் மூலம் இஸ்லாமிய அமைப்புக்களின் நிர்வாகிகள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவைகளில் புகுந்து சோதனை என்ற பெயரில் அவர்களை அச்சுறுத்தி வருகிறது.

எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புக்கள் மக்களாட்சி முறையில் வெளிப்படையாக இயங்கி வரும் அமைப்புக்களாகும். இந்த அமைப்பில், இந்துக்கள் முதலான பிற மதத்தினரும் நிர்வாகிகளாக உள்ளனர்.

ஆம்புலன்ஸ் வண்டிகள் மூலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்தல், இயற்கை பேரழிவின்போது அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளை அளித்தல், குருதிக் கொடை வழங்குதல், மத நல்லிணக்க ஊர்வலங்களை நடத்தி, ஒற்றுமைப் படுத்துதல் என பல வகைகளிலும் இந்த அமைப்புக்கள் ஆரவாரமின்றி பணியாற்றிக்கொண்டு இருக்கின்றன.

இந்த அமைப்புக்களை பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக புழுதிவாறித் தூற்றும் பணியில் சங் பரிவார் கூட்டம் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. மக்கள் ஆதரவுடன், வேரூன்றி வளர்ந்து வரும் இந்த அமைப்புக்களை இயங்கவிடாமல் தடுத்து, அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் காவிக் கும்பல் சதித் திட்டம் தீட்டி செயல்படுத்திக்கொண்டு வருகிறது.

இந்த அமைப்புக்களின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையும், நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டதையும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகவும், சிறுபான்மை இன மக்களுக்கு எதிரானதாகவும் நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

இந்தப் போக்கினை மறுமலர்ச்சி தி.மு.க. கண்டிக்கிறது. அவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!