பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் - கனிமொழி எம்.பி பேச்சு!
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் 'பசுமைவிகடன்', 'நபார்டு வங்கி' மற்றும் 'காமராஜ் கல்லூரி' இணைந்து வழங்கும் "பருவ நிலை மாற்றமும் சுற்றுபுறச் சூழலும்" என்ற தலைப்பிலான தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
"பருவ நிலை மாற்றமும் சுற்றுபுறச் சூழலும்" என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது.
இதில் பேசிய கனிமொழி, "பருவ நிலை மாற்றத்தினால் காற்று, மழை, வெயில், குளிர் என அந்தந்த பருவங்களில் நடக்கக்கூடியவை பருவம் மாறி நடக்கிறது. இயற்கை வளங்களின் அழிவே இதற்கு காரணம். தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன.
இதில் சில தீவுகளின் பரப்பளவு கடல் அரிப்பால் குறைந்துள்ளது. செயற்கை தடுப்புகளால் அவற்றை பாதுகாத்து அதன் பரப்பளவை அதிகரிக்க வனத்துறை முயற்சித்து வருகிறது. பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வினை மாணவர்கள்,மக்கள் மத்தியில் ஏற்படுத்திட வேண்டும்" என்றார்.
பருவ நிலை மாற்றம், சுற்றுபுறச்சூழல் பல்வேறு சார்ந்த பல தலைப்புகளில் கருத்தரங்கம் நடந்து வருகிறது. விவசாயிகள், மாணவ, மாணவிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.