ரயில்ல திருட்டு கேள்விப்பட்ருக்கோம்.. ஒரு ரயிலையே திருடிட்டாங்க பாஸ் கேள்விப்பட்ருக்கீங்களா!? - அதுவும் 90 கண்டெய்னர்களுடன் மாயமான சரக்கு ரயில்.. திணறும் அதிகாரிகள்!
நாக்பூரில் இருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பீகாரில் 2 கி.மீ நீளமுள்ள தண்டவாளம் காணாமல் போனது ஷாக் கொடுத்த நிலையில், தற்போது ஒரு ரயிலே காணாமல் போயுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 1 அன்று நாக்பூரில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், அடுத்த நான்கைந்து நாட்களுக்குள் மும்பையை அடைந்திருக்க வேண்டும். ஆனால், இப்போது 14 நாட்களாகியும் அந்த சரக்கு ரயில் மும்பைக்குச் சென்று சேரவில்லையாம்.
PJT1040201 என்ற எண் கொண்ட சரக்கு ரயில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் MIHAN இன்லேண்ட் கண்டெய்னர் டிப்போவில் இருந்து கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மும்பைக்கு புறப்பட்டது. இந்த ரயில் 90 கண்டெய்னர்களுடன் கிளம்பியுள்ளது. அந்த ரயில் 4 அல்லது 5 நாட்களில் மும்பையைச் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அந்த சரக்கு ரயில் கண்டெய்னர்களுடன் மும்பை வந்து சேரவில்லை. ஆனால் 14 நாட்களாகியும் ரயில் எங்கிருக்கிறது என்று எந்த இடத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் கண்காணிக்க முடியவில்லை.
ஆதாரங்களின்படி பிப்ரவரி 1 அன்று MIHAN ICD இலிருந்து புறப்பட்ட ரயில் கடைசியாக கசரா நிலையத்திற்கு அருகிலுள்ள Oombermali ரயில் நிலையத்தில் (நாசிக் மற்றும் கல்யாண் இடையே) வந்திருக்கிறது . ஆனால் அதன் பின்னர் ரயிலின் இருப்பிடம் ரேக்குகளின் நேரடி இயக்கத்தைக் கண்காணிப்பதற்கான கணினிமயமாக்கப்பட்ட அமைப்பான இந்திய ரயில்வேயின் சரக்கு இயக்க தகவல் அமைப்பிலும் (FOIS Freight Operations Information System) காணாமல் போனது பற்றி துப்பும் இல்லை தகவலும் இல்லை.
கடந்த சில நாட்களாக அந்த ரயிலை கண்டறிய அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அந்த ரயிலைப் பற்றி இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ரயில், பாதி வழியில் காணாமல் போன நிலையில், அந்த ரயிலைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CONCOR) மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சரக்கு ரயில் மாயமாகியிருப்பதால், இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஏற்றுமதியாளர்கள் மற்றும் கப்பல் ஏஜெண்ட்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் எனக் கருதப்படுகிறது.