தேசிய குடற்புழு நீக்க முகாம்: தூத்துக்குடியில் ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்!
தூத்துக்குடியில் பொது சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை சார்பில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்கும் திட்டம் மூலம் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க நாள் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கத்தினை மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர், போதையில்லா தமிழகம் என்ற நிலையை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஒரு சிகரெட்டில் 7000க்கும் மேற்பட்ட இரசாயணப் பொருட்கள் உள்ளன. இதில் 93 பொருட்கள் புற்றுநோயினை உண்டாக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைப்பழக்கத்தினால் 90 சதவீதம் நுரையீரல் புற்றுநோய் வருகிறது. புகைப்பழக்கம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உலகம் முழுவதும் ஆண்டிற்கு 54 இலட்சம் பேர், இந்தியாவில் 12 லட்சம் பேர் புகைப்பழக்கத்தினால் இறக்கிறார்கள். இந்தியாவில் 24 கோடி பேருக்கு புகையிலைப்பழக்கம் உள்ளது. எனவே நாம் சிறு வயதில் இருந்தே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
1 முதல் 19 வயது உள்ளவர்களுக்கு தேசிய குடற்புழு நீக்க முகாம் நடக்கிறது. இந்த நோயினால் ரத்தசோகை ஏற்படுகிறது. வளரிளம் பெண்களுக்கு 48 சதவீதம் ரத்தசோகை உள்ளது. சரியாக கல்வியில் கவனம் செலுத்த முடியாது. திருமணமாகி பேறு காலத்தின்போது சத்து குறைவான குழந்தை பிறக்கும் நிலை உள்ளது. மேலும் மரணம் ஏற்படும் அபாயமும் உள்ளது. வளரிளம் பெண்களுக்கு பள்ளிகளில் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் நமது மாவட்டம் தமிழகத்தில் முதல் மாவட்டமாக வந்து தூத்துக்குடியின் பெருமையை காப்பாற்ற வேண்டும்.
மாணவர்கள் சிறந்த நிலையை அடைய அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர்கள் தேர்வுகளை பார்த்து பயப்படக்கூடாது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து 100 சதவீதம் தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்தார். நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சுகாதார பணிகள் பொற்செல்வன், மாநகராட்சி நகர்நல அலுவலர் தினேஷ், காயல்பட்டிணம் துளிர் அறக்கட்டளை நிறுவனர் அஹமத், துணை இயக்குனர் சுகாதார பணிகள் அவர்களின் நேர்முக உதவியாளர் பிரைட்டன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.