அரசு பள்ளி கழிவறையில் மின்சாரம் தாக்கி மாணவி படுகாயம்... சிகிச்சைக்கு உதவிட கோரிக்கை

அரசு பள்ளி கழிவறையில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாணவி, எலும்புகள் முறிந்து, காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு உதவி எதுவும் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும்,  சிகிச்சைக்கு உதவிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துக்குட்டி கிராமத்தை சேர்ந்த டேவிட்ராஜ் - ஜெனிபரின் மகள் ஜோஸ்லின் ஜெனியா. இவர் திருப்பூர் செரங்காடு பகுதியில் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருப்பூர் செரங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு பயின்று வருகிறார்.  ஜோஸ்லின் ஜெனியா என்ற மாணவி கடந்த 5 ஆம் தேதி பள்ளிக்கு சென்றார். அங்கு கழிவறைக்கு சென்ற போது கழிப்பறையின் கூரையில் இருந்து அறுந்து தொங்கிய வயரில் இருந்து  மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோஸ்லின் ஜெனியா படுகாயமடைந்தார். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு முழங்கை எலும்பு மற்றும் தோள்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டது. கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 நாட்கள் சிகிச்சைக்கு பிறகும் சரியாக காது கேட்காததால், ஜோஸ்லின் ஜெனியாவின் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு சென்று காண்பித்தனர். இதில் அவரது காதுகள் பாதிக்கப்பட்டு விட்டதால், 90 சதவீத கேட்கும் திறன் இழந்து விட்டதாக கூறி உள்ளனர். 

இந்த நிலையில், சிறுமி ஜோஸ்லின் ஜெனியா அரசு பள்ளியின் அஜாக்கிரதை காரணமாக மின்சாரம் தாக்கி அடிபட்ட நிலையில், அரசோ, பள்ளி நிர்வாகமோ உதவ முன்வரவில்லை எனவும், தனது மகளின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் எனவும் அவரது தாய் ஜெனிபர் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஜெனிபர் கூறுகையில், ‘ திருப்பூர் செரங்காட்டில் வசிக்கும் நான் கூலி வேலை செய்து வருகிறேன். மகள் ஜோஸ்லின் ஜெனியா மாநகராட்சிப் பள்ளியில் படித்து வந்த நிலையில், 20 நாட்களுக்கு முன்னர் பள்ளியில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் அஜாக்கிரதையாக இருந்து விட்டு, எனது மகளை குறை சொல்கிறார்கள். எனது மகள் ஜோஸ்லின் ஜெனியாவுக்கு முழங்கை, தோள்பட்டை எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது.  மேலும் கழுத்திலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. காதுகள் 90 சதவீதம் கேட்கும் திறனை இழந்து விட்டது. நான் கூலி வேலை செய்து வருகிறேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு செலவு செய்யுமளவுக்கு வசதி இல்லை. ஆனால் பள்ளியில் கேட்டால் மிரட்டுகிறார்கள். தமிழ்நாடு அரசு எனது மகளின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார். 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்