அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களிடம் ரூ.36 கோடி மோசடி - தொண்டு நிறுவன இயக்குநர் கைது!!


 அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களிடம் ரூ.36 கோடி மோசடி -  தொண்டு நிறுவன இயக்குநர் கைது!!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.36 கோடி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் முப்பிலிவெட்டி பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் மனைவி சண்முகலட்சுமி (33) என்பவரிடம் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த ஜெயபால் மகன் பாலகுமரேசன் (46) மற்றும் சிலர் தாங்கள் நடத்தி வரும் ஆதவா தொண்டு நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்தால் நல்ல சம்பளத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாகவும், 

நீங்கள் தரும் பணத்திற்கு லைஃப் இன்சூரன்ஸ் காப்பீடு, 15 வருட முடிவில் முதிர்வு தொகையுடன் சேர்த்து திருப்பி தந்து விடுவதாகவும், வேலையை விட்டு நின்றால் மேற்படி டெபாசிட் தொகையை திருப்பி தரப்படும் என்றும், 58 வயது வரை அரசு பள்ளிகளில் வேலை செய்யலாம் என்றும் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறியதன் பேரில் மேற்படி சண்முகலட்சுமி ரூபாய் 5 லட்சம் பணத்தை டெபாசிட் செய்துள்ளார். 

பின்னர் தொண்டு நிறுவனத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணியை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளனர். இதனையடுத்து சண்முகலட்சுமி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணனிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மாவட்ட குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில், உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் தலைமை காவலர்  வேல்ராஜா ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, பாலகுமரேசனை நேற்று (24.03.2024) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பாலகுமரேசன் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தனது ஆதவா தொண்டு நிறுவனத்தின் கிளை அலுவலகம் அமைத்து பணியாட்களை நியமித்து வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் ஆசிரியர்களை குறிவைத்து அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்குவதாக கூறி முறைகேடாக பணம் வசூலித்து 1315 பேரிடம்  ரூ.36கோடியே 13 லட்சம் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பாலகுமரேசனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்