தீ தடுப்பு பயிற்சி அனைவருக்கும் அளித்திட சமூக ஆர்வலர் அ. அப்பர் சுந்தரம் கோரிக்கை

தீ தடுப்பு பயிற்சி அனைவருக்கும் அளித்திட சமூக ஆர்வலர் அ. அப்பர் சுந்தரம் கோரிக்கை 

 புயல் மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களைப் போல தீவிபத்து ஏற்படும் நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த தீ தடுப்பு பயிற்சி அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் மன வேதனையை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. இந்நிலையில் இனியாவது தீ தடுப்பு விழிப்புணர்வு மிகவும் அவசியம் தேவைப்படுகிறது. மக்கள் அதிகமாக கூடும் அனைத்து பொது இடங்களிலும் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், அரசு தனியார் அலுவலகங்கள், திருமண கூடங்கள், கல்வி நிறுவனங்களில் தேவைப்படுகிறது என்பது உண்மை. திண்டுக்கல்லில் தீ விபத்து ஏற்பட்ட தனியார் மருத்துவமனையில் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை கருவிகளான ஸ்மோக் டிடெக்டர், தீத்தடுப்பு புகை தெளிக்கும் எந்திரங்கள் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் கூட தீ ஏற்பட்டவுடன் உடனடியாக அதனை அணைப்பதற்கான முயற்சிகள் எடுக்காமல், மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் தங்களையே காத்துக் கொள்ள வெளியே ஓடினார்களே தவிர தீத்தடுப்பு எந்திரங்களை பயன்படுத்தும் சிந்தனையே இல்லாமல் வந்ததனால் தீயின் வேகம் அதிகரித்து பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. தீ தடுப்பு சாதனங்கள் இருப்பதோடு கூட அங்குள்ளவர்களுக்கு அதனை கையாளுகின்ற பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும் எனும் பாடம் திண்டுக்கல் தீ விபத்தால் வெளிப்படுகிறது. இதிலிருந்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அனைத்து இடங்களிலும் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு உரிய தீத்தடுப்பு பயிற்சிகளை அவ்வப்பொழுது வழங்கி, ஊழியர்களை அவசர காலத்திற்கு தயார் படுத்தும் மிக முக்கிய முன் நடவடிக்கை பணியினை அனைத்து நிறுவனங்களும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கும்பகோணம் தீ விபத்தின் போது 93 பள்ளிக்குழந்தைகளை இழந்து தவித்த நாம், இன்று திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேரை இழந்து. வேதனையடைந்துள்ளோம்.மேலும் எதிர்காலத்தில் நவீன மின்சார உபயோக சாதனங்களால் இப்படிப்பட்ட தீ விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளதால் தீ தடுப்பு பயிற்சியால் மட்டுமே உடனடி பலன் கிடைக்கும். தீ மேலும் பரவாமல் தடுத்திட முடியும் என்பதை உணர்ந்து தீத்தடுப்பு பயிற்சிகளை அனைவருக்கும் அவசியமாக கற்றுக் கொடுக்க வேண்டும். அவசர காலத்தில் நாமும் சுற்றத்தாரும் ஆபத்தின்றி தப்பிக்க வழி பிறக்கும் என்பதால் தமிழக அரசு உடனடியாக தீத்தடுப்பு பயிற்சி முகாம்களை அதிக அளவில் நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!