அமெரிக்க வரிவிதிப்பால் ஸ்தம்பிக்கும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள்..தினமும் 500 கோடி இழப்பு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் மீது விதித்த 50 சதவீத அபராத வரி காரணமாக திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் கடும் சிக்கலுக்கு ஆளாகி உள்ளனர். மாதத்துக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் என்று வேதனை தெரிவித்துள்ளனர். 

இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் தமிழ்நாட்டின் திருப்பூர் மாநகரில் இருந்தே நடக்கிறது. 1980 முதல் 90 களில் இங்கு வளர்ந்த பின்னலாடை ஏற்றுமதி தொழில் கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் சந்தைகளை வசப்படுத்தி ஆண்டுக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் ஏற்றுமதி நடக்கிறது. இந்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 30 சதவீத அளவுக்கான பின்னலாடைகள் திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அமெரிக்க ஏற்றுமதியை நம்பி சிலநூறு பெரிய பின்னலாடை நிறுவனங்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இங்கு இருக்கிறார்கள். 

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50 சதவீத அபராத வரியானது திருப்பூர் பின்னலாடை தொழிலை ஸ்தம்பிக்கச்செய்து உள்ளது. இங்கிருந்து ஏற்றுமதி செய்வதற்காக ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு 25 சதவீத வரி ஒரு மாதமாக இருந்து வந்த நிலையில், ஆகஸ்ட் 27ந்தேதி முதல் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு அமலுக்கு வருகிறது. இதனால் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னதாக பெறப்பட்ட பின்னலாடை ஏற்றுமதிக்கான ஆடைகளை பழைய விலையில், பெற்று விற்பது என்பது அமெரிக்க இறக்குமதியாளர்களுக்கு இயலாத விஷயமாகி விட்டது. அதாவது கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் திருப்பூரில் இருந்து இறக்குமதி செய்யும் பின்னலாடை ஒன்றை 10 டாலருக்கு விற்ற ஒரு இறக்குமதியாளர், ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரி காரணமாக, இன்று முதல் அதை 16 முதல் 18 டாலர் மதிப்பில் தான் விற்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். 

இதனால், இந்திய பின்னலாடை துணிகளை இறக்குமதி செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர். ஒரு பக்கம் அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது போல, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாலர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் இதன்மூலம் தினசரி 500 கோடி ரூபாய் முதல் 700 கோடி ரூபாய் உடனடி இழப்பு ஏற்படும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க துணைத்தலைவர் குமார் துரைசாமி கூறுகிறார். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், ‘அமெரிக்காவின் 50 சதவீத அதீத வரி திருப்பூர் பின்னலாடைத்தொழிலை நேரடியாக பாதிப்புக்கு ஆளாக்கும் என்பது உண்மை. சில நிறுவனங்கள் நேரடியாகவும், சில நிறுவனங்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே பாதி உற்பத்தியில் இருக்கக்கூடிய ஆடைகள் நிலை குறித்து இறக்குமதி வர்த்தகர்களிடம் பேசி வருகிறோம், இருதரப்பும் இந்த வரிவிதிப்பால் ஏற்படும் இழப்பை பரஸ்பரம் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்று பேசி வருகிறோம். இந்த நிலை நீடித்தால் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும். மாற்றுச்சந்தைகளை தேடும் வரை இந்த நிலை நீடிக்கக்கூடும் என்றார். 

மேலும் இதுகுறித்து நம்மிடம் பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம், ‘ அமெரிக்கா நம் மீது விதித்துள்ள வரியால் போட்டி நாடுகளுக்கு சாதகமாக அமையும். திருப்பூரின் ஏற்றுமதி பாதிக்கப்படும். புதிய நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தம் மேற்கொள்வது, அமெரிக்காவுடன் இந்த வரியை நீக்க பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற விஷயங்கள் நடைபெற வேண்டும். அரசு சலுகைகளும் வழங்க வேண்டும். அதுவரை தாக்குப்பிடிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். என்றார். 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!