அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் எஸ்.எம்.சி கூட்டம்...திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ராஜு பங்கேற்பு

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம் (எஸ்.எம்.சி) பள்ளி வளாகத்தில் நடந்தது. 


கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியரும், எஸ்.எம்.சி ஒருங்கிணைப்பாளருமான ராமகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக வட்டார கல்வி அலுவலர் சுந்தர்ராஜ் கலந்து கொண்டு பேசினார்.

 தொடர்ந்து எஸ்.எம்.சி உறுப்பினர்கள் பள்ளியின் வளர்ச்சிகள் குறித்தும், உடனடி தேவையாக மாணவிகளுக்கு தனி கழிப்பிடம் கட்டித் தரவும், 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உட்கார பெஞ்ச் மற்றும் டெஸ்க் ஆகியவற்றிக்கு ஏற்பாடு செய்து தரவும், பள்ளி வளாகத்தில் கபடி, கோகோ போன்ற விளையாட்டுகளுக்கு இடம் மற்றும் அதற்கான வசதிகளை செய்துதர வேண்டும் வேண்டும் என வலியுறுத்தியதுடன் மேலும், பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் சுந்தரராஜ் கலந்து கொண்டு பேசினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ராஜு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்பொழுது அவர் பேசியதாவது : தமிழகத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் நடத்துகிறார்கள். பெற்றோர்கள் ஆகிய நாம் பள்ளி முடிந்து குழந்தைகள் வீட்டுக்கு வந்தவுடன் அவர்களிடம் ஏதேனும் மாற்றம் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். முதலில் நாம் குழந்தைகளுடன் அன்பாக பேச வேண்டும். தினமும் பள்ளியில், வகுப்பில் என்ன நடந்தது? என்னென்ன சொல்லிக் கொடுத்தார்கள் என்பதை கேட்டறிய வேண்டும். முதலில் அவர்கள் சொல்ல தயங்குவார்கள். தொடர்ந்து அவர்களிடம் அன்பாக பேசி கேட்கும் பட்சத்தில், அவர்கள் பள்ளியில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை உங்களிடம் கூறுவார்கள். அப்பொழுது அவர்களிடம் எது நல்லது கெட்டது என்பதை நாம் எடுத்து சொல்லி அவர்களை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் பள்ளியில் என்ன நடந்தாலும் குழந்தைகள் வீட்டில் சொல்லும் நிலை ஏற்படும். இவ்வாறு பெற்றோர்கள் வெளிப்படை தன்மையுடன் கண்காணித்தால் அந்த மாணவர்களின் வளர்ச்சியும், முன்னேற்றமும் அதிகமாகும். தொடர்ந்து நாம் கேள்வி கேட்கும் பொழுது ஒரு வருடத்தில் அந்த மாணவனின் முன்னேற்றம் கண் கூட தெரியும். அதேபோல் ஆங்கில ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களிடம் இலக்கணத்துடன் தான் பேசவேண்டும் என்று பேசாமல், தவறாக இருந்தாலும் பேச கற்றுக் கொடுத்தால் அவர்கள் இலகுவாக ஆங்கிலம் கற்றுக் கொள்வார்கள். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர் வளர்மதி, பாரதி உள்பட எஸ்.எம்.சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு : திறன் இயக்கத்தில் கற்றல் அடைவில் பின்தங்கிய மாணவர்களை திறன் திட்ட செயல்பாடுகள் வழியாக முன்னேற்றம் அடைய உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு தருவது. பள்ளி மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் அவற்றினால் ஏற்படும் உடல் நலன் மற்றும் சமூக சீர்கேடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது. ஐ.ஈ.டி மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவது. அதேபோல் அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து பள்ளியின் வளர்ச்சிக்காக செயல்பட வைப்பது. மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிப்பறை கட்ட முயற்சிகள் மேற்கொள்வது. பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது. பள்ளி சாளரம் குறித்து எஸ் எம் சி உறுப்பினர்களிடம் உருவாக்கி பள்ளியை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பள்ளி சாளரத்தில் முறையாக பதிவேற்றம் செய்வது. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மணல் கேணி செயலியை செயலியை தங்களது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து அதனை முறையாக பயன்படுத்துவதை உறுதி செய்வது. அதேபோல் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் பற்றிய தகவல்களை எடுத்துக்கூறி அவர்களை பள்ளியில் சேர்ப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி