பஞ்சகைலாயத்தில் இரண்டாவது கைலாயம்.... அம்மையப்பனாய் ஆதிகைலாய தரிசனம்!

 பஞ்ச கைலாயம்!

எளியோர்க்கு எளியவன்! அய்யன் சிவபெருமானின் வசிப்பிடம் இமயமலைதான். இமயத்தில் ஐந்து மலைகள் பஞ்சகைலாய மலைகளாக, அம்மையப்பனின் வசிப்பிடமாகக் கருதப்படுகிறது. 

இதில் சீனாவின் திபெத்தில் இருக்கக்கூடிய பெரிய கைலாயம் எனப்படும் மானசரோவர் கைலாயம் முதல் கைலாயமாக உள்ளது.  புராண காலந்தொட்டு, நம்மவர்கள் கைலாய மலைக்கு நடந்து செல்லும் வழியில், உத்தரகாண்ட் மாநிலத்தில், இந்தியயா&சீனா எல்லையில் உள்ள ஆதிகைலாயம் இரண்டாவது கைலாயம் ஆகும். 

இமாச்சலப்பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமகேஷ்  ஏரியானது, பார்வதியை மணந்த பிறகு சிவ பெருமானால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த மணிமகேஷ் மூன்றாவது கைலாயமாக இருக்கிறது. 

இமாச்சலப்பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள கின்னார் கைலாயம் நான்காவது கைலாயமாக உள்ளது; இதில் சிவபெருமான், - பார்வதிதேவியுடன் அர்த்தநாரீஸ்வரராக சுயம்பு லிங்க வடிவமாக அருள்பாலிக்கிறார். 

இமாச்சலப்பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் உள்ள ஜன் கிராமத்தில் அமைந்துள்ள  ஸ்ரீகந்த்மகாதேவ் மலை, ஐந்தாவது கைலாயமாக விளங்குகிறது.

பஞ்சகைலாயத்தில் இரண்டாவது கைலாயமாக விளங்கும்  ஆதிகைலாய யாத்திரையானது அற்புதம் நிறைந்ததாக இருக்கிறது.

அம்மையப்பனாய், மலையே வடிவாய், உயர்ந்து நின்று நம்மை மெய்சிலிர்க்க வைத்து காட்சி தரும் அற்புதமான மலைதான் இந்த ஆதிகைலாயம். 19,500 அடி உயரப் பெருமலையாய், கருணை வடிவாய், உயர்ந்து நின்று ஆதிகைலாயமாக காட்சி தருகிறார் அய்யன் சிவபெருமான்.  

இந்த ஆதிகைலாயத்தை 16ஆயிரம் அடி உயரம் வரை சென்று நாம் தரிசிக்கலாம்.



3,000 கி.மீ., பயணம்!

பஞ்ச கைலாயத்தில் இரண்டாவது கைலாயமான, ஆதிகைலாயத்தைக் காண்பதற்கு நாம் இமயமலையில் நெடுநேரம் கடினமான பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சென்னையிலிருந்து டெல்லிக்கு 2,182 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். டெல்லியில் இருந்து, 250 கிலோமீட்டர் தூரம், இமயமலை அடிவார நகரமான காத்கோடம் அல்லது டானக்பூர் நகரத்துக்கு செல்ல வேண்டும். இந்த இடம் வரை சமவெளியில் பயணம் இருக்கும்.

பின்னர் அங்கிருந்து இமயமலைகளின் மடிப்புகளில், சிவாலிக் மலைத்தொடரில் சுமாராக 300 கிலோமீட்டர் தூரம் மலைச்சாலைகளில் தார்ச்சுலா என்கிற நகரம் வரை பயணம் செய்ய வேண்டும். நாம் இதுவரை பயணம் செய்யும் மலைப்பகுதி தொடர்கள் சிவாலிக் எனப்படுகிறது. இது குறைந்த உயரமுடைய இமயமலைப்பகுதிகள். பசுமை நிறைந்த சாலைகளில், மிதமான சீதோஷ்ண நிலையில் பயணம் செய்யலாம். ரோட்டோடென்ராண்ட் காடுகள், பைன் மரக்காடுகள், தேவதாரு மரங்களின் அணிவகுப்பு, அடுக்கடுக்கான மலைகள் என அத்தனையும் ரசிக்கலாம்.


காளி (சாரதா) நதி!

சாரதா என்கிற காளிநதியின் கரையில் மலைப்பயணம் அற்புதமானதாக இருக்கும். மலைச்சாலை என்பதால் 300 கிலோ மீட்டர் தூரம் உள்ள தார்ச்சுலா செல்லும் பயணம் நாள் முழுவதும் நீடிக்கும். தார்ச்சுலா நகரம் இந்திய நேபாள் எல்லை நகரமாக இருக்கிறது.

காளிநதியின் கரையில் இருக்கிறது தார்ச்சுலா நகரம். நதியின் ஒருபுறம் இந்திய தார்ச்சுலா நகரமும், மறுபுறம் நேபாளிய தார்ச்சுலா நகரமும் இருக்கிறது. காளிநதியை கடக்கும் பாலத்தில் நடந்து சென்று நேபாள பகுதிக்கு சென்று வரலாம். அங்குள்ள மார்க்கெட்டை சுற்றிப்பார்த்து பொருட்கள் வாங்கலாம்.

 
தார்ச்சுலா நகரத்துக்கு பிறகு இந்த பயணத்தில்,  சீன எல்லைப்பகுதி வரை செல்ல வேண்டி இருப்பதால்,  தார்ச்சுலாவில் இன்னர்லைன் பெர்மிட் வாங்க வேண்டியது கட்டாயம். அதற்கு நமது உடல்நிலையை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று பெற வேண்டும். பின்னர் காவல்நிலையத்தில் வெரிஃபிகேஷன் செய்து சான்று வாங்க வேண்டும்.

இது தவிர இந்தப்பயணத்தை நாம் சொந்தப்பொறுப்பில் மேற்கொள்வதாக ஒரு உறுதிமொழிப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.  பின்னர் இந்த சான்றுகளை எல்லாம் வைத்து ஆன்லைனில் பெர்மிட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டியது இருக்கும். இந்தப் பணிகளுக்காக ஒரு முழு நாள் ஆகி விடும்.


கயிலைமலைச் சாலை!

அடுத்தநாள் அதிகாலையில் தார்ச்சுலாவில் இருந்து மலைப்பாதையில் காளிநதியை ஒட்டி பயணிப்போம் .  மானசரோவர் கைலாயத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் சாலை இது தான். ஆனால் இந்த வழியில் ஆதிகைலாய யாத்திரை செல்பவர்கள் செல்ல முடியாது. அதற்கு தனி அனுமதி பெற வேண்டும்.  உலகம் தோன்றிய காலத்தில் இருந்து பாரத மக்கள் கைலாய மலைக்கு செல்ல பயன்படுத்திய சாலை இது.  இந்த சாலையில் 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள தார்ச்சுலா நகரத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் குஞ்சி மலைக்கிராமத்தை நோக்கிய பயணம் இது.
 

உயர உயர மலைகளில் வாகனம் ஏறிச்செல்லும்போது, விண்ணைமுட்டும் மலைகளின் அணிவகுப்பு அற்புதமான காட்சியாக இருக்கிறது. இதற்கும் மேல் பசுமை குறைந்து மலைகள் பாலையாய் நிற்கின்றன. புதிதாக அமைக்கப்பட்ட கைலாய மலைவழிச் சாலை; பார்க்க பார்க்க, பயணிக்க பயணிக்க பரவசமாய் இருக்கும்.

நாம் பயணிக்கும் ஜீப்கள் திணறித்தான் மலை ஏறுகின்றன. பனிபோர்த்திய மலைகளில் இருந்து பனி உருகிய பிறகு இருக்கும் கோடுகள், பனியில் கருகிய பசுமைப்பரப்புகள் என இமாலயத் தொடர் மலைகள் வித்தியாசமான அனுபவத்தை தருகின்றது. காளிநதியை ஒட்டிய கரையில் சின்னஞ்சிறு கிராமங்களான, சியாலேக், புதி, கர்ப்யாங் போன்ற கிராமங்களை தாண்டி செல்ல வேண்டும். வழியில் மலைக்கார மக்கள் காடுகளில் வேலை செய்வதையும், கிராமங்களில் இருப்பதையும் பார்க்கலாம்.

செல்லும் வழியில் பல இடங்களில் நமது இன்னர்லைன் பெர்மிட்டை இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்புப் படையினர் சோதனை செய்து பதிவு செய்து கொள்கிறார்கள்.


குஞ்சி மலைக்கிராமம்

கிட்டத்தட்ட தார்ச்சுலாவில் இருந்து 4 மணி நேர பயணத்துக்கு பிறகு நேபாள்ச்சு என்ற மலைக்கிராமத்தை தாண்டி, காளிநதியை சிறிய இரும்பு பாலத்தில் கடந்தோமானால் குஞ்சி என்கிற மலைக்கிராமம் வருகிறது.  இந்த கிராமம் 10,500 அடி உயரத்தில் இருக்கிறது. மலைகளுக்கு நடுவில் இருக்கும் பள்ளத்தாக்கு பகுதி. நேபாள இந்திய எல்லையில் இருக்கும் கிராமம்.  

இந்த கிராமத்தின் மக்கள் தொகை 335 பேர் மட்டும் தான். அவர்களும் மே மாதத்தில் இருந்து அக்டோபர் வரையிலான வெப்ப காலநிலையில் மட்டுமே இந்த கிராமத்தில் வசிக்கிறார்கள். மற்ற குளிர் மாதங்களில் உயரம் குறைவான தார்ச்சுலா போன்ற கிராமங்களுக்கு சென்று விடுகிறார்கள்.

குஞ்சி மலைக்கிராமத்தில் இருந்து, வடக்கே செல்லும் சாலையானது ஆதிகைலாஷ் மலைக்கும் சின் லா கணவாய் மற்றும் லிம்பியதுரா என்ற கணவாய் பகுதிகளுக்கு செல்கிறது. கிழக்கே செல்லும் சாலையானது ஓம் பர்வதம் மற்றும் லிபு-லேக் கணவாய் எல்லை வரை செல்கிறது. லிபுலேக் எல்லையை தாண்டினால் சீனாவில் தக்லகோட் நகரம் 15 கிலோமீட்டர் தான். பெரிய கைலாயம் எனப்படும் மானசரோவர் கைலாயம் 97 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.



காரைக்கால் அம்மையார்

இந்த கைலாய மலைவழிச்சாலையில் தான் நமது முன்னோர்கள் பல நூறு தலைமுறைகளாக கைலாய மலை சென்று வந்திருக்கிறார்கள். காரைக்கால் அம்மையார் பேயுருக் கொண்டு, கைகளால் நடந்து கைலாயம் சென்றதும், சுந்தரர் கைலாயம் சென்றதும் இந்த வழியாகத்தான் இருக்க முடியும். இப்படி பல முன்னோடிகளும், ஞானிகளும் கைலாயம் சென்ற இந்த வழியில் நாமும் இப்போது பயணிக்கிறோம் என்பதே மகிழ்ச்சி.

சரி நாம் குஞ்சியில் இருந்து ஆதிகைலாயம் செல்லக்கூடிய வழிக்கு வருவோம். இந்தப் பகுதி குதி (குந்தி) பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது. குதியாங்டி என்ற சிறுநதி ஓடுகிறது. மனித நடமாட்டம் குறைவான பகுதி என்பதால் இங்கு ஓடும் நதிகள் மிகத்தூய்மையானதாக இருக்கிறது. நதியோரமும், மலையோரமும் பயணித்தால் ‘குதி’ என்ற மலைக்கிராமம் வருகிறது. இங்கு உள்ள சிறு குன்று பாண்டவ பர்வதம் என்ற பெயரிலும், குதி அரண்மனை என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.


குந்திதேவி அரண்மனை

குதி என்ற கிராமமே, மகாபாரதத்தில் வரும் குந்திதேவி வாழ்ந்த பகுதி என்பதும், அங்குள்ள குன்றில் உள்ள பாண்டவர் கோட்டையானது குந்தி தேவியின் அரண்மனை என்றும் சொன்னார்கள். மலைமேல் சிறிய கோட்டை போன்ற அமைப்பு தூரத்திலேயே தெரிகிறது. பக்கத்திலேயே இருக்கக்கூடிய குதி கிராமம் இந்தச்சாலையில் இந்தியாவின் கடைசி கிராமமாக இருக்கிறது. குதி மலைக்கு செல்ல வாகனப்பாதை இல்லாததால் வழியிலேயே பார்த்துவிட்டு பயணத்தை தொடரலாம்.

சுமாராக 15 கிலோமீட்டர் தூரம் உச்சிமலைகளில் பயணிக்கலாம். வழியிலேயே சிறுசிறு கற்கள் உருண்டு செல்வதையும் பார்க்கலாம். பக்கவாட்டில் அதலபாதாளங்களும் மூச்சடைக்கச் செய்கின்றன. ஆங்காங்கே மீதமிருக்கும் பனிக்கட்டிகள் கரைந்து ஓடைகளில் கலக்கின்றன.


கணபதி நளா!

சிலமணிநேரத்தில் கணபதி நளா என்கிற ஓடை வருகிறது. ஓடைக்கு மேலே இருக்கிற மலை கணபதியாக கருதபட்டு வணங்குகிறார்கள்.  2024 வரை இந்த ஓடையில் பாலம் ஏதும் அமைக்கப்படவில்லை. கஷ்டப்பட்டு தான் கடக்க வேண்டும். உருளும் கற்கள், சில்லிடும் தண்ணீர் எல்லாம் தாண்டி ஓடையை கடந்து பயணித்தோமானால் தூரத்தில் தெரியும் முகாம்தான் ஆதி கைலாஷ் அடிவாரமான ‘ஜோலிங்காங்’.



ஆதிகைலாயம்!

’ஜோலிங்காங்’ என்ற இந்த இடம் சரியாக 14ஆயிரத்து 800 அடி உயரத்தில் இருக்கிறது. அங்கிருந்து பார்த்தால் அதிசயமாய் நிற்கும் ஆதிகைலாய மலை சில நிமிடம் நம் நினைவை பிடித்து வைத்துக்கொள்கிறது. கைலாயமலை வாசனை மனதார தரிசனம் செய்யலாம். கொடுமுடிகளின் கொடுமுடியாய் ஆதிகைலாய தரிசனம் காணலாம். அப்படியே பனிமலைச்சிகரமாய், பிரமிடு வடிவமாய், பிரம்மாண்ட லிங்கமாய் ஆதிகைலாயமாய் அய்யன் அருள்கிறார். தோற்றத்தில் பெரிய கைலாய மலை போலவே லிங்க வடிவில் நம்மை பிரமிக்க வைக்கிறார். மனதார, உளமாற, உயிர் பனிய தரிசனம் செய்வது அவ்வளவும் ஒரு ஆனந்த அனுபவம்.  அடிவார கோவிலில் தரிசனம் செய்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யலாம்.



அம்மையப்பன் அருள்!

ஆதிகைலாய மலையில் தான், பல ஆயிரம் ஆண்டுகள் பார்வதி தேவியார் சிவனை நினைத்து தவம் செய்துள்ளார். அதனால், தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த இடத்தில் ஆதிகைலாயமாக உருவாகி, பார்வதி தேவியுடன் இணைந்து அம்மையப்பனாய் அருள்பாலிக்கிறார் அய்யன் சிவபெருமான். பிரமிட் வடிவத்தில் விண்ணை முட்ட பனிபோர்த்தி நிற்கும் ஆதிகைலாயத்தை தரிசனம் செய்யும்போது நமக்கு மெய் சிலிர்க்கிறது.
இந்த ஆதிகைலாயத்தில் தான்,  இலங்கை மன்னன் ராவணனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், ராவணனுக்கு 10 தலைகளையும், 20 கைகளையும் தந்திருக்கிறார். இந்த ஆதிகைலாயம், ’சோட்டா கைலாயம்’ (சிறிய கைலாயம்) என்றும் அழைக்கப்படுகிறது.


கௌரி குண்ட்

மேலும் இந்த ஆதிகைலாய மலைக்கு அருகிலேயே கௌரி குண்ட் என்கிற சுனை இருக்கிறது. பார்வதி தேவி நீராடியதால் கௌரி குண்ட் என்று பெயர் பெற்ற சுனையாகும். ஆதிகைலாயத்திலிருந்து பனி உருகி இந்த சுனை உருவாகிறது. புனித தீர்த்தமாக கருதப்படுகிறது.

இந்த இடத்தில் தான் பார்வதிதேவி விநாயகரை பிள்ளையாராக பிடித்து வைத்து, விநாயகரை உருவாக்கினாராம். தாய் பார்வதிதேவி பாதுகாப்பு நின்ற விநாயகர், சிவபெருமானை தடுத்த காரணத்தால், அவரது தலையை சிவன் கொய்து விட்டதாகவும் சொல்கிறார்கள். பின்னர் விநாயகருக்கு யானைத்தலை வைத்த நிகழ்வெல்லாம் நடந்தது.  

சிவபெருமானால் வெட்டப்பட்ட விநாயகரின் அந்த மனிதத் தலை அல்மோரா அருகில் உள்ள பாதாள் புவனேஷ்வரர் கோவிலில் இன்னும் சிவபெருமானால் பாதுகாக்கப்படுகிறது.


பார்வதி சரோவர்!

கௌரி குண்டில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு, திரும்ப கீழே வந்து எதிர் திசையில் ஒன்னரை கிலோமீட்டர் மலை ஏறினால் பார்வதி சரோவர் வருகிறது. சின் - லா கணவாய்க்கு செல்லும் இந்த சாலையை ராணுவத்தினர் பயன்படுத்துகிறார்கள். ஆள் அரவமற்ற பகுதி இது. யாத்ரீகர்கள் மட்டுமே வந்து செல்கிறார்கள். பார்வதி சரோவருக்கு சென்று அங்குள்ள நீர்த்தேக்கத்தில் தீர்த்தம் எடுக்கலாம். அங்குள்ள சிவ-பார்வதி கோவிலில் சாமிதரிசனம் செய்து விட்டு, பார்வதி சரோவரில் பிம்பமாய் தெரியும் ஆதி கைலாயத்தையும், நேரிலும் கண்டு தரிசிப்பது பிறவிப்பயனை அடைந்ததற்கான மகிழ்வைத்தருகிறது. அந்த இடத்தை விட்டு விலக மனம் இல்லாமல் ஆதிகைலாயத்தை மனதுக்குள் நிரப்பி மகிழலாம்.

பொறுமையாக சில நிமிடங்கள் தியானம் செய்யலாம். 16 ஆயிரத்து 500 அடி உயரத்தில் சிவனார் பார்வையில், உடல் சிலிர்க்க, கண்கள் நிரம்பி வழிய ஒரு தெய்வீக தரிசனம் காணலாம். தூய்மையான பார்வதி சரோவர் தீர்த்தம் எடுத்துக் கொண்டு அடிவாரம் வந்து சிறிது நேரம் அமரலாம். பார்வத் சரோவரின் கரையில் தான் ராவணேஸ்வரன் தவம் செய்ததாக சொல்கிறார்கள்.
ஆதி கைலாயத்தை பார்த்தவாறு நின்று அதை சுற்றி இருக்கும் மலைகளை பார்க்கிறோமல்லவா? அது தான் பிரம்ம பர்வதம் என்கிறார்கள். இடப்புறம் திரும்பிப் பார்த்தால் ஐந்து மலைகள் வரிசையாக நிற்கின்றன. இவற்றை பாண்டவ பர்வதம் என்கிறார்கள். அப்படியே நேரெதிரில் பின்புறம் திரும்பி பார்த்தோமானால் தெரிவது தான் பார்வதி முகுட் எனப்படுகிறது. கிரீடம் போல இருக்கும் இந்த மலை உச்சி, பார்வதி முகுட் (கிரீடம்) எனப்படுகிறது.

அத்தனை உயரத்திலும் நம் முன்னர் பரந்து விரிந்து கிடக்கும் பகுதி பீம் கெட்டி என்கிறார்கள். இந்த சமதளத்தில் பீமன் நெல் விளைவித்தாராம். அதனால் தான் இது பீம் கெட்டி (வயல்) என்கிறார்கள்.

பார்த்து பார்த்து தரிசனம் செய்து விட்டு, பரவசப்பட்டு வியந்து விட்டு, பிரியாமனதோடு திரும்பினால் சில மணி நேரங்களில் குஞ்சி கிராமத்தை அடையலாம். அதற்குள் இரவாகி விடும். குஞ்சியில் உள்ள ’ஹோம் ஸ்டே’ க்களில் ஓய்வெடுக்கலாம். மனதும் உடலும் சிவமாய் நிறைய நிம்மதியாய் தூங்கலாம். 






Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி