சதுரங்க வேட்டை படம் வசனம் போல ஆசையைத் தூண்டுகிறது திமுக... எடப்பாடி பழனிசாமி பேச்சு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 

மணப்பாறை நகரமே அதிர்கின்ற அளவுக்கு மக்கள் வெள்ளம் கடல்போல் காட்சியளிக்கிறது. அடுத்தாண்டு தேர்தலில் நமது கழக வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு உங்கள் எழுச்சியே சாட்சி.


மணப்பாறை என்றாலே முறுக்குக்குப் பெயர் பெற்ற பகுதி. அதோடு வீரமிக்க இளைஞர்கள் இருக்கின்றீர்கள், ஜல்லிக்கட்டு காளை அடக்கக்கூடிய வீரர்கள் நிறைந்த பகுதி. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முழு பாதுகாப்பும் சலுகைகளும் வழங்கப்படும்.

51 மாத திமுக ஆட்சியில் மணப்பாறை மக்களுக்கு ஏதேனும் நன்மை கிடைத்திருக்கிறதா..? விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி இது. இரவு, பகல் பாராமல் உழைக்கின்ற மக்கள் நிறைந்த பகுதி. அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம். 

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்யப்பட்டது. இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்தது கிடையாது. விவசாயிகளுக்கு நீர் முக்கியம். விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர்த்தேக்கப்பட்டன, அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது.

விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கொடுத்தோம். இன்று ஷிப்ட் முறையில் மின் விநியோகம் செய்யப்படுவதால் இரவு வேளையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. 

புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பேரிடர் காலத்தில் பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைக்கப்பட்டு, அதன்மூலம் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். இந்தியாவிலேயே அதிகப்படியான இழப்பீடு பெற்றுக்கொடுத்தது அதிமுக அரசுதான். அதுமட்டுமின்றி, வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசாங்கம் அதிமுக அரசுதான். வேளாண் கருவிகள், உரத்துக்கு மானியம் கொடுத்தோம். 

இன்னொரு பக்கம் விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்புத் திட்டம் கொடுத்தோம், முதியோர் உதவி திட்டம் மூலம் லட்சக்கணக்கான முதியோருக்கு மாத உதவித்தொகை கொடுத்தோம். ஒரே நேரத்தில் 5 லட்சம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. 

ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், புத்தகப்பை, சைக்கிள் கொடுத்தோம். மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களையும் உருவாக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. திமுக அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டம் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.

பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம்  ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் 6 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும்.

கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். திட்டம் சிறப்பாக செயல்பட்டதால் அதிமுகவுக்கு நலல் பெயர் கிடைத்தது. அதனால் திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் காழ்ப்புணர்ச்சி பார்த்து, கிளினிக்கை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்.

நலம் காக்கும் ஸ்டாலின் என்று புதிய திட்டம் அறிவித்திருக்கிறார், அதாவது நான்கு வருடம் கழித்துதான் மக்களின் நலனைப் பற்றி சிந்திக்கிறார். அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 15 லட்சம் மருத்துவ முகாம்கள், 419 மருத்துவக் குழுக்கள், 254 ஆரம்ப சுகாதார நிலையம், 168 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் என மக்களின் நலன் காக்க இவ்வளவு திட்டம் கொடுத்தோம். அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் என 16 பொருள் கொண்ட பொருட்கள் கொடுத்தோம். ஏழை மக்களுக்காக பார்த்து பார்த்து அம்மா செய்துகொடுத்தார்கள். 

உங்களுடன் ஸ்டாலின் என்று நான்காண்டு கழித்து மக்களிடம் வந்திருக்கிறார் முதல்வர். நான்காண்டு மக்களைப் பார்க்காத முதல்வர் ஸ்டாலின். இப்போது வீடு வீடாக அதிகாரிகள் வருகிறார்கள்.  மக்களிடம்  இருக்கும் 46 பிரச்னைகள் பற்றி மனு கொடுத்தால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். 46 பிரச்னைகள் மக்களுக்கு இருப்பதையே  முதல்வர் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார். நான்காண்டு இதுகூட தெரியவில்லை என்றால் எந்த லட்சணத்தில் ஆட்சி நடத்தினார் என்று பாருங்கள். இதேபோல் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது புகார் பெட்டித் திட்டம் கொண்டுவந்து மனுவுக்குத் தீர்வு அளிக்கிறேன் என்றார். எல்லாவற்றையும் தீர்த்துவிட்டாரா…? அப்படி தீர்த்திருந்தால் இப்போது எதற்கு இந்தத் திட்டம்? சதுரங்க வேட்டை படத்தின் வசனம் போன்று ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று மீண்டும் அட்சிக்கு வரவே இப்படி விளம்பரம் செய்கிறார்கள். 


கிணற்றை காணோம் என்று பதாகைகள் வைத்திருக்கிறார்கள், அதுபோல திமுகவையே காணோம். மக்கள், கட்சிக்காரர்களிடம் திமுக செல்வாக்கை இழந்துவிட்டது. அதனால்தான் ஓரணியில் தமிழ்நாடு என்று வீடு வீடாக மக்களிடம் சென்று, கெஞ்சி, உறுப்பினர் சேர்க்கிறார்கள். நன்றாக  ஆட்சி செய்தால்தானே உங்களது கட்சியில் மக்கள் சேர்வார்கள்..? மக்கள் தானாக வந்து உறுப்பினராக சேர்ந்தால்தான் கட்சி வளரும், அப்படி தானாக உறுப்பினர்கள் வந்து சேரும் ஒரே கட்சி அதிமுக. 

திமுக குடும்ப கட்சி, அதிமுக மக்களுக்கான கட்சி. திமுக கார்ப்பரேட் கம்பெனியாகிவிட்டது. கட்சியின் தலைவர் ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மகளிரணித் தலைவர் கனிமொழி. அவ்வளவுதான், எல்லாம் முடிந்துவிட்டது. வேறு என்ன பதவி இருக்கிறது? பிரதான பதவிகளை குடும்பத்தில் உள்ளவர்களே பங்குபோட்டுப் பிரித்துக்கொண்டனர். 

அதிமுகவில் அப்படியா? நான் கீழே இருந்து படிப்படியாக பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறேன். நீங்கள்தான் இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறீர்கள். திமுகவில் இப்படி வாய்ப்பு கிடைக்குமா? அதிமுக ஜனநாயகமுள்ள கட்சி. திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதைகிடைக்காது, அதிமுகவில் இருந்து திமுகவுக்குப் போனவர்களுக்குத்தான் நல்ல மரியாதை கிடைக்கிறது. 

அங்கு இருக்கும் 8 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து திமுகவுக்குச் சென்றவர்கள். ரகுபதியை அதிமுக தொண்டர்கள் எம்.எல்.ஏ ஆக்கினார்கள், அம்மா அமைச்சர் பதவி கொடுத்தார். நமக்கு துரோகம் செய்துவிட்டு, எட்டு பேரு எட்டப்பராக மாறி திமுகவுக்கு சென்றுவிட்டனர்.

அங்கு சென்று ரகுபதி நஞ்சு வார்த்தையைக் கக்கிவருகிறார். அதிமுகவினால்தான் நீங்கள் எம்.எல்.ஏ, அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள், அதிமுகவில் இருந்ததால்தான் ரகுபதி என்பவர், யாரென்று மக்களுக்குத் தெரிந்தது. நன்றி மறப்பது நன்றன்று என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐயன் வள்ளுவன் சொல்லிவிட்டான். ரகுபதி போன்ற ஆட்கள் எதிர்காலத்தில் வருவார்கள் என்று எண்ணியே சொல்லியிருக்கிறார். 

துரோகிகளைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. இது, தொண்டர்கள் நிறைந்த கட்சி. நூறாண்டுகள் கழித்தும் அதிமுக நிலைத்திருக்கும் என்று அம்மா சட்டமன்றத்தில் சொல்லிவிட்டுச் சென்றார். கட்சித் தலைவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள், அதுவும் அதிமுகவில் தான் முடியும்.

(கூட்டத்தில் ஒருவர், ‘மணப்பாறை எம்.எல்.ஏவை காணோம்’ என்று குரல் கொடுத்தார். அதற்கு பதிலளித்துப் பேசினார் இபிஎஸ்) அடுத்தாண்டு தேர்தலில் 

நம் கழக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி, அப்போது உங்கள் தொகுதி எம்.எல்.ஏவும் தானாகக் காணாமல் போய்விடுவார். திமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் எல்லோரும் இனி ஜெயிக்க முடியாது என்று முடிவெடுத்துவிட்டார்கள். எனவே, எரிகிற வீட்டில் பிடுங்குவது வரை லாபம் என்று இந்த 7 மாதத்தில் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டார்கள், அதனால்தான் எம்.எல்.ஏ.வைக் காணவில்லை. 

மின் கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியாக வசூலிக்கிறார்கள். அப்போதும் கூட மின்சார வாரியம் கடனில்தான் தத்தளிக்கிறது. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். வியாபாரிகள் எல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும், அதிமுக ஆட்சி எப்படியிருந்தது..? திமுக மற்றும் அதிமுக ஆட்சியை ஒப்பிட்டுப் பார்த்து ஆதரவு தாருங்கள். 

கொரோனா காலத்தில் விலை மதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். நோயைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையிலே நல்ல முறையில் சிகிச்சை கொடுத்தோம். கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என 7 லட்சம் பேருக்கு மூன்று வேளை உணவு கொடுத்தோம். தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தோம். கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், பள்ளி மாணவர்கள் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். 

பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது, கல்வித்தரம் குறைந்துவிட்டதால் 207 பள்ளிகள் மூடப்பட்டது. இந்த பள்ளிகளை அரசு மீண்டும் திறப்பதாகச் சொல்லியது, ஆனால் திறப்பது போன்று தெரியவில்லை.. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் அதிகளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எண்ணிக்கை அரசுப் பள்ளியில் குறைந்துள்ளது. ஏன்..? சரியான ஆசிரியர் இல்லை, தரமான கல்வி கிடையாது. இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, தனியார் பள்ளியில் சேர்கிறார்கள். 

மேலும் அரசுப் பள்ளிகளில் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர், அதில் ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்கள் யாராவது போதைப் பொருள் பயன்படுத்துகிறார்களா என்று பார்க்க வேண்டுமாம், எவ்வளவு அவமானமான செயல். ஒரு அரசாங்கம் தலைமை ஆசிரியர்களுக்கு இப்படி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. விவரத்தைக் கேட்டிருக்கிறார்கள். இதுக்காகவா அரசுப் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புகிறோம்..? உங்கள் பள்ளியில் சிறந்த மாணவன் யார் என்று கேளுங்கள். சிறந்த விளையாட்டு வீரர் யார் என்று கேளுங்கள். ஒழுக்கமானவர் யார் என்று கேளுங்கள். அதைவிட்டுவிட்டு மாணவர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக இப்படி சுற்றறிக்கை அனுப்பிய அரசு தொடர வேண்டுமா? 

இதைத்தான் நான் பலமுறை சொல்லிவந்தேன். போதை பொருள் தாராளமாக கிடைக்கிறது. இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. அதனால் போதை மாநிலமாக உருவாகிவிட்டது. 

மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று  இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். உதயநிதி போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்கிறார். எப்போது..? எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின்னர் சொல்லி என்ன பயன்? இவ்வாறு பேசுவதன் மூலம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிவிட்டனர் என்பதை முதல்வர் ஸ்டாலினே ஒப்புக்கொண்டுவிட்டார். 

சிறுபான்மை மக்களுக்கு நிறைய திட்டங்கள் கொண்டுவந்தோம், வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது திமுகவும் கூட்டணி கட்சிகளும் அவதூறு பரப்புகின்றன. இஸ்லாமியர்களுக்கு என்னென்ன திட்டங்களைக் கொடுத்தோம் என்பதைச் சொல்கிறேன். 

ரமலானுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க 5400 மெட்ரிக் டன் அரிசி கொடுத்தோம், நாகூர் தர்காவுக்கு சந்தன கட்டைகள் விலையில்லாமல் கொடுத்தோம், ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம் 12 கோடி ரூபாய் கொடுத்தோம், சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினோம், ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்கள், மோதினார்களுக்கு ஓய்வூதியம் அதிகரித்தோம், உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம், வக்ப் வாரியத்துக்கு ஆண்டு மானியம், பள்ளிவாசல் தர்கா புனரமைப்பு நிதி வழங்கினோம்.

இஸ்லாமியர்களுக்கு நேரடி நியமன முறையில் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறையை நீடிக்க அரசாணை வெளியிட்டோம், டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையில் நாகூர் தர்கா குளக்கரை சேதமடைந்துவிட்டது. அதனை சரிசெய்ய நானே நேரில் பார்வையிட்டு 4 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி சீரமைத்துக் கொடுத்தேன். சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்துக் கொடுத்தோம், மறைந்த அப்துல் கலாம் நினைவாக கலை அறிவியல் கல்லூரி ராமேஸ்வரத்தில் தொடங்கினோம்.

திண்டுக்கல்லில் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி வாழ்க்கை வரலாறு குறித்த மணிமண்டபம் அமைத்தோம், கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபம் அமைத்தோம், இவற்றை எல்லாம் இந்நேரத்தில் நினைவு கூர்கிறேன். 

கிறிஸ்தவ மக்களுக்கு, கிறிஸ்தவப் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் அமைத்து அவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கினோம், தேவாலய புனரமைப்பு நிதி 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கினோம், ஜெருசலம் புனித பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு 38 ஆயிரம் ரூபாயாக நிதியுதவி உயர்த்தி வழங்கினோம். பின்னர் முழு மானியம் வழங்கப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து அதனைச் செய்யவில்லை. 

கிறிஸ்தவ அருட்சகோதரிகளுக்கு ஜெருசலம் புனிதப் பயணத்துக்கு தனி ஒதுக்கீடு செய்யப்பட்டது, சிறுபான்மை மாணவர் கல்வி உதவித் தொகை ஆண்டுதோறும் முழுமையாக வழங்கப்பட்டது. 10 ஆண்டுகளில் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த 37 லட்சத்து 16 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு 884 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கினோம். சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட முழு ஒத்துழைப்பு வழங்கினோம். 

31 ஆண்டு அதிமுக ஆட்சி ஜாதி, மதச் சண்டையின்றி அமைதிப்பூங்காவாக விளங்கியதை சிறுபான்மையினர் எண்ணிப்பார்க்க வேண்டும். நீங்கள் ஆதரவு வழங்குவதும் வழங்காததும் உங்கள் விருப்பம் ஆனால் திட்டமிட்டு ஆளும்கட்சியினர் அவதூறு பரப்புகிறார்கள், அதை மட்டும் நம்பவேண்டாம்.

போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றித் தரப்படும். ஏழை தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும். பெண்களுக்கு தீபாவளி தோறும் சேலைகள் வழங்கப்படும். 

மணப்பாறை தொகுதி வறட்சியான பகுதி. இங்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்…’’ என்று மக்கள் ஆரவாரத்துடன் பேசி முடித்தார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!