தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் வலுக்கட்டாய ஆயர்கள் பணியிட மாற்றத்தால் சமூக பதட்டம் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை மனு.!
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் வலுக்கட்டாய ஆயர்கள் பணியிட மாற்றம் தொடர்பாக நிலவும் சமூக பதட்டத்தை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி நாசரேத் திருமண்டல மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "நாங்கள் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் என்னும் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளோம். தற்பொழுது எங்கள் திருமண்டலத்தில் தேர்தல் காலம் நடைமுறையில் உள்ளது, சில நாட்களுக்கு முன்பு வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி நிர்வாகியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் நீதிமன்ற ஆணைப்படி தேர்தலை சினாட் என்னும் அமைப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒரு நிர்வாக குழு அமைக்கப்பட்டு பொறுப்பேற்றனர். இதற்கிடையில் பொறுப்பு பேராயராக இருந்த செல்லையா ஓய்வு பெற்று புதிதாக ஆந்திராவைச் சேர்ந்த வர பிரசாத் என்பவர் பிரதமர் பேராயரின் ஆணையாளராக பதவி ஏற்று நாட்களுக்குள்ளாக திருமண்டலத்தைப் பற்றி எந்தவித பூகோள அமைப்பு சார்ந்த எந்த விடயமும் தெரியாத நிலையில் முதல் கூட்டத்திலேயே 30-க்கும் மேற்பட்ட ஆயர்களை கட்டாய பணியிட மாற்றம் செய்து, உடனடியாக ஏற்கனவே பணி செய்தவர்களை எடுத்துவிட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதன் மூலமாக திருச்சபைகளில் குழப்பம் ஏற்பட்டு நிலவி வருகிறது. ஏற்கனவே தூத்துக்குடியில் பணியாற்றி வரும் சில குருவானவர்களால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, தெற்கு காவல் நிலையம், வடக்கு காவல் நிலையம், தாளமுத்து நகர் போன்றவைகளில் தொடர்ச்சியாக காவல் துறையினரால் பிரச்சனைகள் விசாரிக்கப்பட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இந்த ஆயர் மாற்றங்களால் மீண்டும் சட்டம் ஒழுங்கு சீர்கெட அதிக வாய்ப்புள்ளதாக நாங்கள் அறிந்து அச்சப்படுகிறோம்.
ஆகவே நாங்கள் நடுநிலைவாதிகளாக எந்தப் பக்கமும் சாராமல, அரசியல் காரணங்களுக்காக அநியாயமாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆயர்களை மீண்டும் அதே இடத்தில் பணி அமர்த்தி திருமண்டலத்தில் அமைதி நிலவ மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து எங்களுக்கு உதவுவதோடு, அரசு உதவி பெறும் எங்களது சிறுபான்மை கல்வி நிலையங்களிலும் அமைதி கெடாத வகையில் படிக்கும். மாணவ மாணவியர் படிப்பு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
