சிவகங்கை அருகே கோர விபத்து: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பலி.!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி - காரைக்குடி சாலையில் இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகேயுள்ள கும்மங்குடியில் இன்று மாலை இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் நடந்தது. ஒரு பஸ் திருப்பூரில் இருந்து காரைக்குடி சென்று சென்றுள்ளது. எதிர் திசையில் இன்னொரு அரசு பஸ், திண்டுக்கல் நோக்கி வந்துள்ளது.இரு பஸ்களும், திருப்புத்துார் சாலையில், சமத்துவபுரம் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், இரு பஸ்களில் பயணித்த 9 பேர் அதே இடத்தில் பலியாகினர். பயணிகளில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்களும், போலீசாரும் இணைந்து மீட்பு பணி மேற்கொண்டனர். காயம் அடைந்தவர்கள், அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் இருவர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
விபத்தால் அந்த சாலையில் 2 மணி நேரத்திற்க்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கிரேன் மூலம் பேருந்துகள் அகற்றப்பட்ட பின்பு அந்த சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
