"சாதி என்பது உண்மையா? நிஜமான ஒன்றா? என கேளுங்கள்.. கேட்டால் தான் உங்களால் மாற்ற முடியும்" - மாணவர்கள் மத்தியில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அஹமதாபாத் தேசிய புத்தாக்க மையம் மற்றும் நேஷனல் பொறியியல் கல்லூரி ஆகியவை இன்ஸ்பயர்-மானக் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகள் நேற்றுகோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தொடங்கியது. இந்த விழாவை திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்தார்.
கண்காட்சியை தொடங்கி வைத்து கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசியதாவது: ஒரு போட்டியில் கலந்து கொள்ளும் போது அதற்கான முன் அனுபவம் முக்கியமானது. ஏனென்றால் போட்டியில் வெற்றி பெறுவது அல்லது இந்த முறை அந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காமல் போவது என்பது பெரிய விஷயம் கிடையாது. அனைத்தையும் தாண்டி அந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் போது கிடைக்கும் அனுபவம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கி தரக்கூடிய ஒன்றாக இருக்கும். இதில் அனுபவம் கிடைக்கவில்லை என்றாலும், வேறு வாய்ப்புகள் உள்ளன. இதுவே கடைசி என்று எண்ணி விடக்கூடாது.
உலகத்துக்கே முன்மாதிரியாக 3d பிரின்டரில் 64 கிராமில் செயற்கைக்கோள் தயாரித்தது தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது மாணவர் இர்பான் ஷாரூக். இவ்வளவு குறைவான எடையில் செயற்கைக்கோள் தயாரித்து விண்வெளிக்கு அனுப்ப முடியும் என்று நிரூபித்த பின்னரே உலகமே பெரிய வளர்ந்த நாடுகள் தான் செயற்கைக்கோள்கள் கண்டுபிடிக்க முடியும் என்ற மனநிலையில் இருந்து மாறியது.
வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகள் கூட செயற்கைக்கோள்கள் செய்ய முடியும் என்ற மனநிலையை மாற்றியது தமிழ்நாட்டில் இருந்து வந்த ஒரு மாணவர் தான். உலகத்துக்கே முன் உதாரணமாக தமிழகம் உள்ளது. இங்கிருந்து வந்துள்ள மாணவ மாணவிகள் போட்டி என்பதைத் தாண்டி தொடர்ந்து கேள்விகள் எழுப்ப வேண்டும். கேள்விகள் கேட்கும் போது தான் மாறுதல் வரும். அதனை அறிவியலுடன் நிறுத்தி விடக்கூடாது.
உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களிலும் மாற்றம் வேண்டும். சாதி, மதம், வேற்றுமை, வித்தியாசம், வெறுப்பு உள்ளிட்டவைகள் இருக்கின்றன. இதையெல்லாம் ஏன் என்று கேட்க வேண்டும். சாதி என்று சொல்வது நிஜமான ஒன்றா என்று கேளுங்கள். தந்தை பெரியார் வழியில் நாமும் இந்த சமூகத்தையும், அறிவியலையும், சிந்தனையும் மாற்றி காட்டுவோம் என்று பேசினார்.
இந்த விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் க.சண்முகசுந்தரம், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா, நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சே.சண்முகவேல், கல்லூரி முதல்வர் காளிதாச முருகவேல் , கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, திமுக ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன்,ஜெய கண்ணன் மற்றும் திமுக நிர்வாகி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கண்காட்சியில், சுமார் 194 பள்ளிகளில் இருந்து வந்த மாணவ மாணவிகள் அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு, ஆரோக்கியம், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளை உள்ளடக்கிய 194 மாதிரிகள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
குறிப்பாக, சாலை பாதுகாப்பு, வாகன விபத்து தடுப்பு, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகள், தீயணைப்பு ரோபோ, தானியங்கி தூய்மை செய்யும் சாதனங்கள், ஸ்மார்ட் ஹெல்மெட், மருத்துவ முன்னெச்சரிக்கை கருவிகள், கண் பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் ஸ்மார்ட் ஸ்டிக், கேட்புத் திறன் குறைந்தவர்களுக்கான ஆடியோ-விசுவல் உபகரணங்கள் போன்ற சமூக நல சார்ந்த மாதிரிகள் சிறப்பு கவனம் ஈர்த்தன.
அதேநேரத்தில், தானியங்கி வடிகால் சுத்தம் செய்யும் ரோபோ, இணையவழி வாகன கண்காணிப்பு, தரவு அடிப்படையிலான ஸ்மார்ட் வாக்கிங் சூட்கள், ரயில் தண்டவாள பிளவு கண்டறிதல், தானியங்கி வேகத்தடை, எரிவாயு பாதுகாப்பு எச்சரிக்கை முறை போன்ற பாதுகாப்பு சார்ந்த தொழில்நுட்ப புதுமைகள் மாணவர்களின் பிரச்சினை தீர்க்கும் திறனை வெளிப்படுத்தின.
இதனுடன், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் புதுமைகளில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இலை நோய் கண்டறிதல், தானியங்கி பாசன அமைப்பு, விதை விதைக்கும் இயந்திரம், சோலார் சக்தியில் இயங்கும் உலர் இயந்திரங்கள், கழிவுகளை எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பம், பிளாஸ்டிக் மறுசுழற்சி செங்கற்கள், வெள்ள நீர்ப்பாசனம் கண்காணிப்பு, நீர் உறிஞ்சும் சாலைகள் போன்றவற்றையும் மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர்.

