தூத்துக்குடி கிள்ளிக்குளம் மாணவ மாணவிகள் மூலம் விஷப்பூண்டு செடியை அகற்றும் பணி.!
தூத்துக்குடி வல்லநாடு அருகே கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் பார்த்தீனியம் என்ற விஷப்பூண்டு செடியை அகற்றும் பணி கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
பின்னா் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் புவனேஸ்வரி மாணவ மாணவர்களிடம் கூறுகையில் "பார்த்தீனியம் மனிதர்களின் தோல் அழற்சி மற்றும் ஆஸ்துமாப் போன்ற சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கால்நடைகள் இதனை உண்ணும் போது அதன் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படுகிறது. பாலின் தரம் குறைகிறது. இது வேகமாகப் பரவி, மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இதனை தொடக்க நிலையிலே அகற்ற வேண்டும் ,இல்லையெனில் வளர்ந்து வெடித்து பரவும் தன்மை கொண்டது. இதனால் மற்ற செடி, கொடிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் இதனை ஒரு லிட்டர் தண்ணீரில் அட்ரசின் 4 கிராம் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 8 கிராம் 2,4-டி கலந்து தெளிப்பதன் மூலம் தவிர்க்கலாம். மேலும் எளிமையான முறையில் ஒரு லிட்டர் தண்ணீரில் 200 கிராம் சமையல் உப்பு கலந்து தெளிப்பதன் மூலமும் தவிர்க்கலாம்" என்று பார்த்தீனியத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
