ஆட்டோவில் ஒட்டி இருந்த அமைச்சர் கீதா ஜீவன் படம் நீக்கம் - தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!
தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தொடர்பான கொடிகள், சின்னங்கள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்களை பொது இடங்களிலும், வாகனங்களிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி தூத்துக்குடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்டு வந்த பரிசோதனையின் போது அந்த வழியே வந்த ஒரு ஆட்டோவில் அரசியல் கட்சி சார்ந்த தூத்துக்குடி அமைச்சர் கீதா ஜீவன் படம் ஒட்டப்பட்டிருந்தது. அதை தேர்தல் பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையிலான குழுவினர் ஆட்டோவில் ஒட்டப்பட்டு இருந்த படத்தை அகற்றினர்.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், எந்தவொரு வாகனங்களிலும் அரசியல் கட்சி சின்னங்கள் அல்லது தலைவர்களின் படங்களை பயன்படுத்தக்கூடாது என்று பறக்கும் படை அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வரும் வேளையில்
இந்த திடீர் நடவடிக்கை தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
