'1 ஓட்டு முதல் 976 ஓட்டுகள்' வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்த 15 பேர் யார்? தவெகவினர் எத்தனை பேர்?
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் வென்றுள்ளன.
எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 98110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் 1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி பெற்ற வெற்றி, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக உள்ளது.
ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளில் வெற்றி மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள் யார்?
எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி?
கம்பம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ஜெகநாத் மிஸ்ரா தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணனை 751 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் தவெக வேட்பாளர் அருள் விக்னேஷ் அதிமுக வேட்பாளர் ராஜிவ்காந்தியை 798 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் திமுக வேட்பாளர் மகேஷை காட்டிலும் 214 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர் கருணாநிதி தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணியனை காட்டிலும் 843 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
குளித்தலை தொகுதியில் திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன், தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணியைக் காட்டிலும் 579 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
கும்பக்கோணம் தொகுதியில் போட்டியிட்ட தவெகவின் வினோத் திமுக வேட்பாளர் அன்பழகனை விட 679 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
பழனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவி மனோகரன் தவெக வேட்பாளர் பிரவீன்குமாரை காட்டிலும் 693 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
பரமத்தி வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சேகர் திமுக வேட்பாளர் மூர்த்தியை விட 308 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
போளூர் தொகுதியில் தவெக வேட்பாளர் அபிஷேக் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரை விட 227 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
திண்டிவனம் சட்டப்பேரவை தொகுதியில் விசிக வேட்பாளர் வன்னியரசு அதிமுக வேட்பாளர் அர்ஜுனனை காட்டிலும் 734 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
திருக்கோயிலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பழனிசாமி தவெக வேட்பாளர் விஜய் பரணி பாலாஜியை விட 285 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சிவக்குமார் தவெக வேட்பாளர் விஜய் வடிவேலுவை விட 910 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
திருப்பத்தூர் தொகுதியில் இரவு வரை நீடித்த வாக்கு எண்ணிக்கையில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி திமுக வேட்பாளரான அமைச்சர் பெரிய கருப்பனை 1 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதுவே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.
உதகமண்டலம் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக வேட்பாளர் போஜராஜன் தவெக வேட்பாளர் இம்ராஹிமை விட 976 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக வேட்பாளர் ஸ்ரீனிவாசன் அதிமுக வேட்பாளரும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமியை விட 138 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
