லாரி மீது ஆட்டோ மோதி விபத்து - ஒருவர் பலி,10 பேர் படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே, முத்துநகர் கடற்கரைக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்த 11 பேர் பயணித்த ஆட்டோ, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சோழபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கிருஷ்ண லீலா (38) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பவதாரணி (11), பாக்கியலட்சுமி (17), ராஜா வர்ஷினி (14), மகாலட்சுமி (19), சுபாஷிணி (21), மகாலட்சுமி (47), சீதாலட்சுமி (19), ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் (32), கார்த்திக் (20), ஸ்டீபன் ராஜ் (19) ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துறைமுகத்திலிருந்து மரத்தடிகளை ஏற்றிச் சென்ற லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை கவனிக்காமல் ஆட்டோ மோதியதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக திரும்பிய குடும்பத்தில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
