விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு திடீர் உடல்நலக்குறைவு.!
விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த 10-ஆம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது மாயமானார். மறுநாள் காலை அங்குள்ள காட்டுப்பகுதியில் காயங்களுடன் அவர் சடலமாக மீட்கப்பட்டார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு அருகில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு மோட்டார் சைக்கிளைப் போலீசார் கைப்பற்றினர். அதன் பதிவு எண்ணை ஆய்வு செய்தபோது, அது ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் திருடப்பட்டது எனத் தெரிந்தது.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள காற்றாலை கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த வாகனத்தை ஒரு நபர் ஓட்டிச் செல்வது உறுதியானது. அந்த உருவ அமைப்பை வைத்து நடத்திய விசாரணையில், அவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (எ) மாவீரன் (37) என்பது கண்டறியப்பட்டது. அதன் பின் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் குறித்து போலீசார் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2020-ஆம் ஆண்டு கீழஈரால் பகுதியில் 65 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இவருக்குத் தொடர்பு உண்டு. அந்த வழக்கில் 2022-இல் தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேல்முறையீட்டு மனு மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த இவர், நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
அதன்படி கடந்த 10-ஆம் தேதி நீதிமன்றத்தில் கையெழுத்திட்டுவிட்டுத் திரும்பும்போது, காட்டுப்பகுதியில் தனியாக வந்த மாணவியைக் கண்டு, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாகப் போலீசார் தெரிவித்தனர்.
சாயல்குடி பகுதியில் பதுங்கியிருந்த அவரைத் தனிப்படையினர் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
