திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வு.. கூட்டுக்கமிட்டி கூட்டத்தில் ஒப்புதல்

 திருப்பூர் பனியன் நிறுவனத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நிறைவு. நான்கு ஆண்டுகளுக்கு 33 சதவீதம் ஊதிய உயர்வுக்கு பணியின் நிறுவனங்கள் ஒப்புதல்.

டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரில், பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம்  பிரதானமானதாக இருந்து வருகிறது. இங்குள்ள பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் வட மாவட்ட மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு 4  ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு ஒப்பந்தம் உருவாக்கப்படுகிறது. தொழிற்சங்கங்களும், உற்பத்தியாளர் சங்கங்களும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை நிர்ணயித்து, ஒப்பந்தம் செய்கின்றன. முந்தைய ஒப்பந்த காலம் கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், தற்போதுள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வு , பஞ்சப்படி , பயணப்படி,  புதிய ஒப்பந்தம் , வாடகைப்படி , குடும்ப நல உதவித்தொகை , திருமண உதவித்தொகை , ஓவர் டைம் பேட்டா உள்ளிட்டவை தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. தொழில்துறையினரும் தற்போதுள்ள தொழில் சூழலை முன்வைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.  இரு தரப்பினருக்குமான பேச்சு வார்த்தை 5 மாதங்களாக 8 அமர்வுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில்  திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் இன்று ஒன்பதாவது கட்ட பேச்சு வார்த்தை நடந்தது. இதில், ஏற்றுமதியாளர்கள்சங்கத்தின் கெளரவ தலைவர் சக்திவேல் , தலைவர் கே,எம்.சுப்பிரமணியன் , கூட்டு கமிட்டியின் ஆலோசகர் பிரேம் துரைசாமி மற்றும்  தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் ,  திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் , பின்னலாடைத் துணி உற்பத்தியாளர்கள் சங்கம்  உள்ளிட்ட  உற்பத்தியாளர் சங்க தரப்பு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோல், தொழிலாளர்கள் தரப்பில் ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎஃப், ஐஎன்டியுசி, ஏடிபி, எச்எம்எஸ், உள்ளிட்ட 9 முக்கிய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் தற்போதுள்ள விலைவாசியை அடிப்படையாக கொண்டு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஊதியத்தில் அடுத்த 4 வருடங்களுக்கு 33 சதவிகிதம் உயர்த்தி வழங்குவது எனவும் , முதல் வருடத்திற்கு 18 சதவிகிதம் அடுத்தடுத்த 3 வருடங்களுக்கு தலா 5 சதவிகிதம் எனவும் , பஞ்சப்படி 20 ஆயிரம் புள்ளிகளுக்கு 2,500 ரூபாயும் அதற்கு மேல் உயரும் புள்ளிகளுக்கு 15 பைசா எனவும் , பயணப்படி 25ல் இருந்து, 30 ரூபாய் ஆகவும் , ஓவர் டைம்  டீ பேட்டா 30ல் இருந்து 60 ரூபாய் ஆகவும் கடந்த முறையை காட்டியிலும் உயர்த்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இருதரப்பாலும் ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டு உடன்படிக்கையில் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கத்தினர் கையெழுத்திட்டுள்ளனர். புதிய உடன்படிக்கையின் படி பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாள்ர்களுக்கு 8 மணி நேரத்திற்கு சுமாராக 80 ரூபாய் வரை ஊதிய உயர்வு ஏற்படும் எனவும் இது ஷிப்ட் மற்றும் பீஸ் ரேட் என அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கு பொருந்தும் என  கூறப்படுகிறது. நீண்ட இழுபறிக்கு பின் ஒப்பந்தம் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளும், தொழிற்சங்கத்தினரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துகொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி