தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கையால் அதிரும் தூத்துக்குடி - பெண் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த பாஜகவினர் மீது வழக்கு பதிவு.!
தேர்தல் நாள் மே.23, தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. இதன்பிறகு தேர்தல் பறக்கும் படையின் பணிகளும் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் அரசியல் தலைவர்கள் படம், கொடி, சின்னம் போன்ற அரசியல் சார்ந்து வாகனங்களில் ஒட்டி இருப்பதை அப்புறப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. நடவடிக்கையின் படி, அமைச்சர் கீதா ஜீவன் படம் ஒட்டி வந்த ஆட்டோவை வழிமறித்து கிழிக்கும் படி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆட்டோ ஓட்டுநருக்கு உத்தரவிட்டு, கீதா ஜீவன் படமும் அகற்றப்பட்டது. இது தூத்துக்குடியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த வேளையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிக் காரில் கட்சிக் கொடிகளைக் கட்டியிருந்ததோடு, கட்சித் துண்டையும் அணிந்து வந்த பாஜக பிரமுகர்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கையால் அதிகாரிகளுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தால் தூத்துக்குடி தொகுதிக்குள் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக பாஜக பிரமுகர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடந்தது என்ன?
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை, பொன்மாரி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், தெர்மல் நகர் காவல் நிலையம் அருகேயுள்ள பாரதி நகர் அருங்காட்சியகம் முன்பாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாகக் காரில் வந்த பா.ஜ.க. பிரமுகர்களான முரளி மற்றும் முருகேசன் ஆகியோரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிக் காரில் கட்சிக் கொடிகளைக் கட்டியிருந்ததோடு, கட்சித் துண்டையும் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியபோது, இருவரும் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அந்த நிகழ்வை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளனர்.
இதன் காரணமாக அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் விதிகளை மீறியது தொடர்பாகப் பறக்கும் படை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், தெர்மல் நகர் போலீசார் முரளி மற்றும் முருகேசன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
