தூத்துக்குடி : பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக சர்வ சாதாரணமாக நிறுத்தப்படும் தனியார் வாகனங்கள்- காவல்துறை நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை.!
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பேருந்து நிற்க்கக்கூடிய கவுண்டர்களில் தனியார் கார்கள் மற்றும் பைக்குகள் சர்வ சாதாரணமாக நிறுத்தப்படுவதால் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக உள்ளது என பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடியின் மிக முக்கிய பேருந்து நிலையமாக நகரின் மையப் பகுதியில் பழைய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து கன்னியாகுமரி, நாகர் கோவில், தென்காசி, உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கொல்லம், திருவனந்தபுரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அரசு பஸ்கள், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் பஸ் நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் பேருந்து நிலையத்துக்குள் பைக், கார், ஆட்டோக்கள் கட்டுப்பாடின்றி வந்து செல்கின்றன. பேருந்து நிலையத்துக்குள் உள்ள கடைகளின் முன்புறமும் பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பேருந்துகளை குறிப்பிட்ட கவுண்டர்களில் நிறுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகின்றது. சில நேரங்களில் வாலிபர்கள் சிலர் பைக்குகளில் பஸ் நிலையத்துக்குள் ரேஸ் செல்வது போல் வேகமாகவும் செல்கின்றனர். இது பயணிகளுக்கு பெரும் இடையூறாகவும், பாதுகாப்பற்றதாகவும் உள்ளது என பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பயணிகள் கூறுகையில் "பேருந்து நிலையத்துக்குள் தனியார் வாகனங்கள் நுழைய தடை விதிக்க வேண்டும். அதை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து, வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும், தனியார் வாகனங்கள் பஸ் நிலையத்துக்குள் நுழைய தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும் தற்போது பேருந்து நிலையத்துக்குள் காலை மற்றும் மாலை வேளைகளில் ரோந்து பணியில் உள்ள போலீசார் கண்காணித்து, பேருந்து நிலையத்துக்குள் நுழையும் தனியார் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தால் மட்டுமே இது போன்ற விதி மீறலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தனர். இது தொடர்பான எச்சரிக்கை பலகை, பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டு உள்ளது. அதில் தனியார் வாகனங்கள் பேருந்து நிலையத்துக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என கூறி உள்ளனர். ஆனால் அதனை யாரும் கண்டுகொள்வதில்லை, எனவே பஸ் நிலையத்துக்கு உறவினர்கள், குடும்பத்தினரை அழைத்து வருபவர்கள் பஸ் நிலையத்துக்கு வெளியே தான் இறக்கி விட வேண்டும். வயதானவர்கள், மாற்று திறனாளிகளாக இருந்தால் மட்டும் பிளாட்பாரம் வரை வரலாம். அவர்களும் உடனடியாக வாகனத்தை எடுத்து சென்று விட வேண்டும். பஸ் நிலையத்துக்குள் கடை வைத்துள்ளபவர்களும், தங்களது வாகனங்களை பஸ் நிலையத்துக்குள் பார்க்கிங் செய்ய கூடாது என போலீசார் கண்டிப்பு காட்ட வேண்டும் . எச்சரிக்கையை மீறி பஸ் நிலையத்துக்குள் நுழையும் தனியார் வாகனங்களுக்கு, அபராதம் விதிக்க வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஏற்கனவே பேருந்துநிலையத்திற்குள் பொதுமக்கள் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தாலும் அது மீண்டும் மீண்டும் தொடர்வதாகவே குற்றச்சாட்டுகள் எழுகிறது. ஆகவே மாநகராட்சியின் விதிமுறை மீறி நடப்பவர்கள் மீது சரியான நடவடிக்கையை எடுக்க மாநகராட்சி ஆணையரும் - மேயரும் முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக எழுகிறது.
போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி நிர்வாகம்
இதை கவனத்தில் கொண்டு இந்த மாதிரி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
நடவடிக்கை எடுப்பார்களா? காத்திருப்போம்.
