"காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் " - காட்டமான அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த்!
''தவெகவின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா என்னை பற்றி கூறியது உண்மைக்கு மாறானது. காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்'' என்று நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் சமீபத்தில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி தமிழக அரசை கண்டித்து தவெகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தவெகவினர் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது.
ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ''ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் விரட்டியது திமுக தான். திமுகவின் மிரட்டலுக்கு பயந்து அரசியலுக்கு வராமல் போன ரஜினி திமுக குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களிலே நடிக்கும் நிலைமைக்கு போய்விட்டார். விஜய்க்கு மன தைரியம் அதிகமாக இருப்பதால் தான் அவர் அரசியலில் இறங்கியிருக்கிறார்'' என்று கூறினார். ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சு ரஜினிகாந்த் ரசிகர்களை கோபப்படுத்தியது. இதனால் ரஜினி ரசிகர்களுக்கும், தவெகவினருக்கும் சமூக வலைதளங்களில் சண்டை உச்சமடைந்துள்ளது.
இது குறித்து ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
"தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி திரு.பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன், தமிழக அமைச்சர் திரு.ரகுபதி, திரு.தொல்.திருமாவளவன், திரு.எஸ்.பி.வேலுமணி, நண்பர் திரு.அண்ணாமலை, திரு.அர்ஜுனமூர்த்தி, திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஜி.கே. வாசன், திரு.ஜான் பாண்டியன்,, திரு.புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், திரு.அமீர், திரு.ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் திரு.நக்கீரன் கோபால், சாணக்கியா திரு.ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
