தூத்துக்குடி தொகுதியின் திமுக வேட்பாளர் அமைச்சரா? மேயரா பரபரப்பாகும் தூத்துக்குடி அரசியல்..!
தூத்துக்குடி திமுக என்றாலே மாற்றமில்லாத ஆளுமைவாதிகள் நிரம்பிய தொகுதியாகும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனி பெரும்பான்மையான மெஜாரிட்டி அரசியல் பிரமுகராக கீதா ஜீவன் தான் தூத்துக்குடி தொகுதி முழுவதும் ஜொலிக்கிறார். 1989ல் அண்ணாச்சி பெரியசாமி தொடங்கி வைத்த குடும்ப அரசியல், பொது வாழ்க்கைக்கும் அரசியல் வாழ்க்கைக்கும் துணையாகி நிற்கிறது. இந்த அரசியல் சூழ்நிலையில் கீதா ஜீவனை எதிர்த்து களம் காண கட்சிக்குள் யாருமே விரும்பாத சூழ்நிலையில், கீதா ஜீவனே தொகுதிக்குள் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தார். கீதா ஜீவனை எதிர்த்து "எதிர் நீச்சல்" போடும் வேட்பாளராக எம்.பி கனிமொழியின் தீவிர ஆதரவாளர் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமியை தொகுதிக்குள் அடையாளப்படுத்திக் கொள்ள நான்கு திசைகளிலும் களப்பணி நடந்தேறியுள்ளது. இதன்படி அக்கா தம்பி என்ற உறவு முறைகளையும் மீறி தனி மனித அரசியலுக்குள் ஏற்பட்ட மோதல் ஒரே கட்சிக்குள் இருவேறு கொள்கைவாதியாக செயல்படத் தொடங்கினார்கள்.
அதன்படி மாநகர பகுதிக்குள் நடந்துவரும் அரசு பணிகளை காலையில் மேயர் பார்வையிட்டால், மாலையில் அமைச்சர் அந்த இடத்தை ஆய்வு செய்ய வருவார். மேயர் மண்டலம் வாரியாக நடத்தி வரும் மக்கள் குறைதீர்க்கும் முகாமை அமைச்சரும் அவர் பங்குக்கு ஓர் இடத்தில் நடந்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது, அமைச்சர் கீதா ஜீவனின் போட்டி அரசியல். இந்நிலையில் கட்சிக்குள் மேயர் வசம் கவுன்சிலர் ஐக்கியம் ஆனால், அமைச்சர் வசம் வட்ட செயலாளர்கள் ஐக்கியமாகி கொள்கின்றனர். இந்த மாபெரும் போட்டி அரசியலை எம்.பி கனிமொழியின் கண் அசைவில் காய் நகர்த்திக் கொண்ட மேயர், கீதா ஜீவனுக்கு நேர் எதிர் திசை நோக்கி அரசியல் செய்ய தொடங்கி இருப்பது தூத்துக்குடி தொகுதிக்கு மாற்றத்தை தருமா? என்பதும் சந்தேகம் தானா?
இந்நிலையில் வருகின்ற தேர்தல் களத்தில் தூத்துக்குடி தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக கீதா ஜீவன் போட்டியிடுவார், அதற்கு திமுக தலைமை வாய்ப்பு கொடுக்கும் என்று முரசு கொட்டிய கீதா ஜீவன் ஆதரவாளர்களுக்கு, போட்டியாக ஜெகன் களத்தில் நிற்பதை தடுக்கவும் முடியவில்ல- தவிர்க்கவும் முடியவில்லை. விருப்ப மனு வழங்கிய நாட்களில் கீதா ஜீவன், புளோரன்ஸ், மதியழகன், ஆர்தர் மச்சாது என்ற நபர்கள் மட்டுமே வழங்கியதாக வெளிவந்த செய்திகள் கூட சமூக வலைதளங்களில் வைரலானது. அப்பவும் இந்த தேர்தலிலும் கீதா ஜீவனுக்கு கட்சியில் எதிர்த்து சீட்டு கேட்க ஆளில்லை என்ற விதிமுறை தான் மீண்டும் வெளிபடுத்தியதாக சொல்லப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் நடந்த நேர் காணலில் கனிமொழியின் ஆதரவில் தூத்துக்குடி மேயர் ஜெகனும் கலந்து கொண்டதால் இவரும் விருப்ப மனு செய்திருந்த விபரம் வெளியே தெரியவந்துள்ளது. இதனால் இரண்டு ஆதரவாளர்களும் எங்களுக்கு தான் சீட்டு என்று கொட்டம் அடிக்கத் தொடங்கிவிட்டனர். கட்சிகாரர்களோ தேர்தலுக்கு தேர்தல் மாற்று வேட்பாளரை திமுக தலைமை அறிவித்தால் நிரந்தர ஆளுமையில் இருந்து நாங்கள் விடுதலை பெறுவோம் என்று கட்சித் தலைமைக்கு வேண்டுகோள் வைக்கின்றனர்.
இது குறித்து மேயரின் ஆதரவாளர்கள் கூறியதாவது..
இந்த முறை ஜெகன் பெரியசாமிக்கு தான் சீட்டு. இதில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது, இதில் எந்தவிதமான குழப்பமும் நிகழாது. கடந்த 2021 தேர்தல் களத்தில் தூத்துக்குடி தொகுதிக்கு போட்டியிட விரும்பி, விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார் ஜெகன். இதன்படி நடந்த நேர்காணல் நிகழ்வில் "இந்த ஒரு முறை எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள், அடுத்த முறை ஜெகனுக்கு வாய்ப்பு கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டதற்கினங்கவே கடந்த முறை கிடைக்க கூடிய வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆகவே இந்த முறை ஜெகனுக்கான வாய்ப்பை தலைமை தட்டி பறிக்காது என்று நம்புகின்றோம். தலைமை கழகத்தின் பேச்சை மீறி செயல்படாத காரணத்தால் வருகின்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமியே போட்டியிடுவார் என்கின்றனர்.
ஆனால் கீதா ஜீவன் தேர்தல் களத்தை புத்திசாலித்தனமாக மேற்கொண்டதால் வேட்பாளர் அறிவிப்பில் எனது பெயர் தான் வெளிவரும் என்று கீதா ஜீவன் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் முரசு கொட்டி காத்திருக்கின்றனர். இதனால் கீதா வா? ஜெகனா? என்ற போட்டா போட்டி தொகுதிக்குள் நிகழ்கிறது. இதனால் தூத்துக்குடி அரசியல் களம் வெயிலுக்கு முன்பே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
