தேர்தல் பறக்கும் படை சோதனையால் மாற்றமும் இல்லை, மாற்றியமைக்க ஆளும் இல்லை.!
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே சோதனை என்ற பெயரிலான ஆய்வு ஆங்காங்கே நடத்தப்படுகிறது. இந்த ஆய்வில் சிறு குறு தொழில் செய்பவர்கள் முதல் தினமும் ஆயிரக்கணக்கில் ரொட்டேசன் செய்துவரும் கம்பெனி முதலாளி வரையில் சிக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் சில நேரங்களில் தன்னுடைய பணத்தை இழக்கவும் செய்கிறார்கள். தேர்தல் முடியும் வரை பறக்கும் படை ரவுண்ட்சும் தீவிரமாக தான் செயல்பாட்டில் இருக்கிறது.
ஆனால் இதுவரையிலும், இவர்களது சோதனையில் ஒரு கார்ப்பரேட் கம்பெனி முதலாளியும் சிக்கியதாக தெரியவில்லை, எந்த அரசியவாதியும் அதாவது எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர், மேயர், நகரசபை தலைவர், பஞ்சாயத்து தலைவர் உள்ப்பட ஒரு வார்டு கவுன்சிலர்கள் கூட தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியதாக அறியமுடியவில்லை.
அதைப்போலவே இவ்வளவு நேர்மையாக நமது தேர்தல் அதிகாரிகள் நடந்து கொண்ட பின்னரும் தேர்தல் நாளில் வேட்பாளர்களுக்கு ஓட்டு போடச் சொல்லி அவரவர் தகுதிக்கேற்ப வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கத்தான் செய்கிறார்கள். அதுவும் வெளிப்படையாகவே நடக்கிறது, மக்களும் கொடுப்பவரிடம் பயமின்றி நேரடியாகவே கேட்டும் பெறுகின்றனர்.
அப்படினா?...
இந்த பணம் எப்படி இவர்கள் (கட்சிகாரர்கள்) வசம் வந்து சேருகிறது. யார் மூலமாக இந்த பணம் சேமி(வசூலி)க்கப்படுகிறது. என்ன நடந்தாலும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நாகரீக அரசியலை அரசியல் பிரதிநிதிகள் அவரவர் தொகுதிக்குள் விதைத்துவிட்டார்கள், அந்த விதை நிழல் தரும் மரமாக வளர்ந்து, இன்று அதை ஆலமரமாகவும் வளர்த்து விட்டனர்.
ஆனால், இதுவரையில் கார்ப்பரேட் கம்பெனி முதலாளி, அரசியல் பிரமுகர்கள் உள்ப்பட அரசியல் வாதிகளுக்கு பணம் கொடுத்து உதவுபவர்கள் என்று எவரும் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிக் கொள்வதில்லை என்றால் "ஓட்டுக்கு பணம் கொடுக்க எங்கிருந்து, யாரிடம் இருந்து - பணம் வருகிறது" என்பதை கண்டறிய நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு வழியேதும் கிடைப்பதில்லை, மேலும் வீதிக்கு வீதி பயமின்றி ஓட்டுக்கு பண பட்டுவாடா செய்யும் அரசியல் சார்ந்து செயல்படும் கட்சிகாரர்கள் மீது நேர்மையான தேர்தல் அதிகாரியால் மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்க இயலவில்லை. அப்பிராணி பொதுமக்களிடம் சட்ட விதிமுறைக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பதை போல தேர்தல் விதிமுறைகளை உண்மையாக மீறி நடப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் தானே தவறுகள் திருத்தம்படும், குற்றம் செய்பவர்கள் தன்டிக்கப்படுவார்கள். ஆனால் இதுபோன்ற நேர்மையான நடவடிக்கை நடப்பதில்வையே ஏன்?
நீதியும் நியாயமும் காசு உள்ளவனுக்கு ஒருவிதமாகவும், ஏழை எளியவர்களுக்கு ஒருவிதமாகவும் தான் செயல்படுகிறது. இதை கேட்டால் சட்ட அவமதிப்பு நீதி மன்ற விதிமுறை மீறல் என்று பயமுறுத்தி பாமரனை முடக்கி விடுகின்றனர். மொத்தத்தில் பறக்கும் படை என்ற பெயரில் நடக்கும் கெடுபிடிகளால் பாதிக்கப்படுவது பாமர மக்களும், சிறு குறு வியாபாரிகளும் மட்டுமே, இதில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை, இதனை மாற்றியமைக்க ஆளும் இல்லை என்பதே நிதர்சன உண்மை.
