மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்; தூத்துக்குடி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக ஸ்ரீநாத் நியமனம்.!
தமிழக அரசின் வளர்ச்சி பணிகளை விரைவுப்படுத்துவதற்கு மாவட்டங்கள் தோறும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலமைச்சரோடு சேர்த்து தவெக 31 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 2 எம்.எல்.ஏக்கள், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் தலா 1 எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 35 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இந்த சூழலில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவும், அரசின் நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் என்.ஆனந்த் விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் மயிலாடுதுறை மாவட்டத்துக்கும், நிதியமைச்சர் மரிய வில்சன் திருநெல்வேலி மாவட்டத்துக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பெரம்பலூர் மாவட்டத்துக்கும், வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சர் தென்னரசு காஞ்சிபுரம் மாவட்டத்துக்கும், வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் திருப்பத்தூர் மாவட்டத்துக்கும் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு அமைச்சர் சரத்குமார், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு, ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு அமைச்சர் காந்திராஜ், தருமபுரி மாவட்டத்துக்கு அமைச்சர் ராஜ்குமார் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐயூஎம்எல் கட்சியைச் சேர்ந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கும், வேளாண் துறை அமைச்சர் வினோத் தஞ்சாவூர் மாவட்டத்துக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்சி மாவட்டத்துக்கும், அமைச்சர் விஜயலட்சுமி கரூர் மாவட்டத்துக்கும் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் அமைச்சர் லோகேஷ் நாமக்கல் மாவட்டத்தினுடைய பொறுப்பு அமைச்சராகவும், அமைச்சர் அருண்ராஜ் திருப்பூர் மாவட்டத்தினுடைய பொறுப்பு அமைச்சராகவும், அமைச்சர் கமலி நீலகிரி மாவட்டத்தினுடைய பொறுப்பு அமைச்சராகவும், அமைச்சர் விஜய் பாலாஜி வேலூர் மாவட்டத்தினுடைய பொறுப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்துக்கு அமைச்சர் செங்கோட்டையன், கோவை மாவட்டத்துக்கு அமைச்சர் சம்பத் குமார், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களுக்கு அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அமைச்சர் முகமது பர்வேஸ், சிவகங்கை மாவட்டத்துக்கு அமைச்சர் பிரபு, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு அமைச்சர் கீர்த்தனா, விருதுநகர் மாவட்டத்துக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி, திருவாரூர் மாவட்டத்துக்கு காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன், தூத்துக்குடி மாவட்டத்துக்கு அமைச்சர் ஸ்ரீநாத், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு அமைச்சர் மதன்ராஜா, சேலம் மாவட்டத்துக்கு விஜய் தமிழன் பார்த்திபன், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக ஸ்ரீநாத் நியமித்து, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது
