தூத்துக்குடியில் கொடிகட்டி பறக்கும் போலி லாட்டரி விற்பனை : தினசரி பல கோடி ரூபாய் மோசடி – 2 பேர் கைது.!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் துறைமுகம், அனல் மின் நிலையம், உப்பளங்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை குறிவைத்து, சமீப காலமாக ஒரு கும்பல் போலி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு தினசரி பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த கும்பல் போலியான ஈ-மெயில் ஐடி, வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்களை உருவாக்கி, நிஜமான லாட்டரி வியாபாரம் போல காட்டி, ஒவ்வொரு தொழிலாளரிடமிருந்தும் அதுவும் குறிப்பாக தினக்கூலிகளிடம்  தினசரி ரூ.300 முதல் ரூ.500 வரை வசூலித்து வந்ததாக போலீசாருக்கு பல்வேறு வழிகளில் தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் மற்றும் நகர துணை காவல் கண்காணிப்பாளர் மதன் ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில், தூத்துக்குடி தென்பாகம், மத்திய பாகம், வடபாகம், தாளமுத்துநகர், தெர்மல்நகர், முத்தையாபுரம், சிப்காட் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், தாளமுத்துநகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி சந்திப்பு பகுதியில் போலி லாட்டரி விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலரிடம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த அய்யப்பன் (53) மற்றும் சிலுவைப்பட்டியை சேர்ந்த காசிலிங்கம் (38) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போலி நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

போலீசார் நடத்திய விசாரணையில், தொழிலாளர்களை குறிவைத்து அதிக விலைக்கு போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதன் மூலம் தூத்துக்குடி பகுதியில் திரைமறைவாக தினசரி தொழிலாளர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு வந்தது இதன் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தூத்துக்குடி கடலோர மாவட்டத்தில் மீனவர்கள், உப்பள மற்றும் மூடை சுமை தூக்கும் தொழிலாளர்களை ஏமாற்றி போலி லாட்டரி மூலம் பணம் பறிக்கும் கும்பலை முழுமையாக கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி