தூத்துக்குடியில் முதன் முதலாக திமுக இளைஞரணி அலுவலகம் திறப்பு.! - திமுக மாவட்ட செயலாளர் 2.O அரசியலுக்கு மாறுகிறாரா? மாற்றப்படுகிறாரா?
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டு பகுதியில் திமுக இளைஞரணி அலுவலகத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முதன் முதலாக மாநகருக்குள் திறந்து வைத்திருப்பது, இளைஞரணியினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தூத்துக்குடியை பொறுத்தவரையில் இளைஞரணிக்கான முக்கியத்துவத்தை மாவட்ட செயலாளர் இதுவரையில் கொடுத்ததில்லை. மேலும் அவர்களை சுதந்திரமாக கட்சி சார்ந்தோ மக்கள் பணி சார்ந்தோ செயல்பட அனுமதித்தாக தெரியவில்லை. இந்நிலையில் மாவட்ட - மாநகர - பகுதி கழகத்தில் இளைஞரணிக்கு என்று தனி அலுவலகம் அமைத்திட அனுமதி தராத போது, 40 வது வார்டில் மாவட்ட செயலாளர் திடீர் என புதுமை செய்திருப்பது வரவேற்கத்தக்க செயலாக உள்ளது.
மேலும், அண்ணாச்சி பெரியசாமி அவர்கள் காலகட்டத்தில் மாநகர திமுக அலுவலகம் புகழ் பெற்று விளங்கியது. அவருக்கு பிறகு அதுவும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மாநகர திமுக அலுவலகத்தை காணவில்லை. மாநகர செயலாளரும் தனது பணியை சுதந்திரமாக செய்ய முடியாமல் மாவட்ட செயலாளருடன் இணைந்து செல்கிறார். இவருக்கான அரசியல் அடையாளம் தூத்துக்குடி மாநகர திமுகவுக்குள் காணாமல் போய்விட்டது. எல்லாமே மாவட்ட செயலாளர் பார்த்துக் கொள்வார் என்ற அடிப்படியில் திமுகவின் நிலை மாறிவிட்டது. தற்போது தூத்துக்குடி திமுக என்றால் ஒன்லி ஒன் கலைஞர் அரங்கம், கீதா ஹோட்டல், போல்பேட்டை அமைச்சர் இல்லம் இவைகள் தான் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திக்கும் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இதில் கலைஞர் அரங்க வளாகத்தை மாவட்ட திமுக அலுவலகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மற்றபடி அது கல்யாண மண்டபமாக தான் மாநகருக்குள் ஜொலிக்கிறது.
மாவட்ட செயலாளரின் திடீர் மனமாற்றம், இளைஞரணிக்கு என அலுவலகம் திறக்க வைத்திருக்கிறது. இதிலும் பல உண்மைகள் மூடி மறைக்கப்படுகிறது. அதாவது, நாம் தமிழர் கட்சி தொடங்கியதும் திமுகவில் இளைஞரணியை தான் பாதிக்க செய்தது, அதைப்போலவே தற்போது தவெக எனும் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கியதும் திமுகவில் இளைஞரணி முழுமையாக டேமேஜ் ஆகி வருகிறது. இதில் மாநில இளைஞரணி பொறுப்பாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியை பலப்படுத்தும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும் பல விஷயங்களை அவ்வப்போது அடிக்கடி முன்னெடுக்கத் தொடங்கியுள்ளார். குறிப்பாக தற்போது மண்டலம் வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு எனும் பிரமாண்டமான மாநாட்டை நடத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதிலும் நிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடிகள் இருப்பதாக பலரும் மாவட்ட செயலாளரின் தவறை சுட்டிக்காட்ட முடியாமல் தவிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அண்ணாச்சி பெரியசாமி தனது மாவட்ட தலைமையை விட்டுக் கொடுக்காமல் தன் வசப்படுத்திக் கொள்ள தனக்கு விசுவாசமான பலரை பொறுப்புக்குள் கொண்டு வந்தார். அந்த பார்முலாவையே தான் தற்போதைய மாவட்ட செயலாளரும் பின் பற்றி வருவதால் பெரும்பான்மையான நிர்வாகிகள் 60 மற்றும் 70 வயதை கடந்தும் பொறுப்பை தக்க வைத்துக் கொள்கின்றனர். இதனால் இளைய தலைமுறையில் ஆன இளைஞரணிக்கும் மூத்த பொறுப்பாளர்களுக்கும் இடையிலான அரசியல் செயல்பாடுகள் ஒத்து போகவில்லை. இதனால் தான் திமுகவுக்குள் இளைஞரணி பலம் வீழ்ந்து கிடக்கிறது என்கின்றனர் திமுக வின் மூத்த நிர்வாகிகள்.
எதிர்கால அரசியலை தீர்மானிக்க கூடிய நாளைய தலைமுறையை உருவாக்குவதில் திமுக பின்னடைவில் தான் இருக்கிறது. 2.O ஆட்சியமைப்போம் என்று கனவு காணும் திமுக, நிர்வாகிகளின் குளறுபடிகளை மாற்றியமைத்து டுவென்டி கிட்ஸ்க்கும் வாய்ப்பு கொடுக்க முன்வரவேண்டும். இன்னும் பழமை வாய்ந்த நைன்டி கிட்ஸை மட்டுமே நம்பி 2.O ஆட்சியமைப்போம் என்பது பகல் கணவாக தான் அமையும்.
எனவே மாவட்ட செயலாளரின் இந்த திடீர் முடிவு தொடர வேண்டும், அணி சார்ந்த அனைத்துக்கும் அலுவலகம் திறக்க வழி வகை செய்ய வேண்டும். மேலும் மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட கழக நிர்வாகிகளுடன் நேரடி தொடர்புக்கு திமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் அலுவலகம் என்பது அவசியமாகிறது. ஆகவே மாவட்ட செயலாளரின் தலைமையில் இளைஞரணி அலுவலகம் திறப்பு விழா திமுகவினர் இடையே மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்...
திமுக மாவட்ட செயலாளர் 2.O அரசியலுக்கு மாறுகிறாரா? மாற்றப்படுகிறாரா? விடை தேடி காத்திருப்போம்...
