தூத்துக்குடி :நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு புரட்சிகர இளைஞர் முன்னணி ஆதரவு.!
புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் தூத்துக்குடி மாநகரப் பொறுப்பாளர் சுஜித், புறநகர் பொறுப்பாளர் பெரியார் பித்தன், நெல்லை மாநகர பொறுப்பாளர் பாண்டியன் தென்காசி மாநகரப் பொறுப்பாளர் சீனிவாசன் ஆகியோர் தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
மாநகரப் பொறுப்பாளர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியும் பாஜக-அதிமுக கூட்டணியும் முதன்மையாக போட்டியிடுகின்றன.
இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 'பாஜக - அதிமுக கூட்டணி தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கும் தமிழக உரிமைகளுக்கும் எதிரான கூட்டணி. எனவே அக்கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது. மாறாக திமுக வேட்பாளர்களுக்கும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கும் மட்டுமே வாக்களிக்க வேண்டும்' என தமிழ்நாடு முழுவதும் எங்கள் அமைப்பு சார்பாக பரப்புரை செய்ய உள்ளோம்.
ஏனென்றால் வர்ணாசிரம அடிப்படையிலான சமஸ்கிருத ஆதிக்க, மதவாத நாடாக இந்தியாவை மாற்றும் கொள்கையைக் கொண்ட ஒரு சனாதன பாசிச அமைப்புதான் ஆர்எஸ்எஸ். இந்த ஆர்எஸ்எஸ்-ன் அரசியல் பிரிவே பாஜக உள்ளது.
இந்த பாஜக 12 ஆண்டு காலமாக ஒன்றியத்தில் ஆட்சி செய்து வருவதுடன் பல மாநில அரசுகளையும் கைப்பற்றி பல தேசிய இன நாடான இந்தியாவை ஒற்றைத் தேசமாக அறிவிக்க வேலை செய்து வருகிறது.
அதற்கு இன்னும் சிம்ம சொப்பனமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆரியப் பார்ப்பனிய சனாதன தர்மத்துக்கு எதிரான நீண்ட நெடிய போராட்ட மரபைக் கொண்டுள்ளது தமிழ்நாடு.
அந்த சனாதன எதிர்ப்பு பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக விளங்கிய திராவிட இயக்கமும் அதன் சமூக நீதி, மாநில உரிமை, இந்தி ஆதிக்க எதிர்ப்பு கொள்கைகளும் கடந்த 50 ஆண்டுகளில் இந்திய அளவில் தொழில் வளர்ச்சியிலும் மனித வளக் குறியீட்டிலும் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றி உள்ளன. அதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சிக்கு ஒன்றிய பாஜக அரசு தந்து வரும் பல்வேறு நெருக்கடிகளைத் தாண்டி பல துறைகளிலும் தமிழகம் முன்னேறி வருகின்றது என்றார்.
தொடர்ந்து தமிழர் விரோத ஆர்எஸ்எஸ் பாஜகவின் கைபிடியில் இருந்து வருகிறது. இன்று வரை தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து வரும் பாஜக ஒன்றிய அரசின் தமிழக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக வாய் திறக்காமல் திமுக எதிர்ப்பை மட்டுமே மையப்படுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொய்களை பரப்பி வருகிறார்.
இந்த பாஜக-அதிமுக கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் மாநில உரிமைகள் முற்றாக பறி போகும்; தமிழகம் இது வரை அடைந்துள்ள முன்னேற்றமும் வளர்ச்சியும் பின்னடைவை சந்திக்கும்; மத நல்லிணக்கச் சூழல் கெடும். எனவே தமிழர் விரோத பாஜக - அதிமுக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும்.
திராவிட பாரம்பரிய இயக்கமான திமுக சமூகநீதி, மாநிலசுயாட்சி கொள்கைகளை உயர்த்திப் பிடித்து வருவதுடன் தமிழகத்தில் சனாதனப் பாசிசத்தைத் தடுக்கும் ஒரு தடுப்பு அரணாகவும் உள்ளது. இதுவரை தமிழகம் அடைந்துள்ள முன்னேற்றத்தை பாதுகாத்து மேலும் வளர்க்க திமுக வெற்றி பெறுவது அவசியமாகும். எனவே தான் திமுக வேட்பாளர்களுக்கும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டின் உரிமைகளையும் நலன்களையும் காவு வாங்கத் துடிக்கின்ற ஆர்எஸ்எஸ்-பாஜக மற்றும் அதன் அடிமையாக உள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகளை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்!
திமுக வேட்பாளர்களுக்கும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என்றார்.
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரத்தில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்தும் அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை இதுவரை வெளியிடப்படாத குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு இதற்காக அடுத்து வரக்கூடிய திமுக ஆட்சியில் இது குறித்து வலியுறுத்துவோம் என்றார்.
