மூதாட்டியை தாக்கி நகை பறித்த தூத்துக்குடி கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் கைது!- சாயல்குடி அருகே துணிகரம்.!!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூரில், மூதாட்டி ஒருவரைத் தாக்கி தங்க நகைகளைக் கொள்ளையடித்த விவகாரத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் அவர்களது நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நரிப்பையூர் வடக்கு மறவர் தெருவைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (86). இவரது கணவர் மறைந்துவிட்ட நிலையில், மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால் மாரியம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து அவர் வீட்டிற்கு வந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.
மதியம் சுமார் 2:00 மணி அளவில் மாரியம்மாளின் வீட்டிற்கு வந்த இரண்டு இளம்பெண்கள் உள்ளிட்ட மூவர், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். அவர்களை நம்பி வீட்டிற்குள் தண்ணீர் எடுக்கச் சென்ற மூதாட்டியைப் பின்தொடர்ந்த கும்பல், திடீரென அவர் கண்கள் மற்றும் முகத்தில் மிளகாய்ப்பொடி ஸ்பிரே அடித்துள்ளனர்.
கண் எரிச்சலில் நிலைகுலைந்த மூதாட்டியைத் துணியால் கட்டிப்போட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் மாரியம்மாள் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி, 1 பவுன் மோதிரம் மற்றும் கம்மல் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பியோடியது.
இச்சம்பவம் குறித்து சாயல்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர். தீவிர விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி சோட்டையன் தோப்பைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி, தாளமுத்து நகரைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி மற்றும் அவர்களது நண்பரான கர்ணன் (25) ஆகிய மூவரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், 17 வயது மாணவியின் பாட்டி வீடு நரிப்பையூரில் இருப்பதால், அவர் அடிக்கடி அங்கு வந்து சென்றுள்ளார். அப்போது தனியாக வசிக்கும் மாரியம்மாளை நோட்டமிட்டு, தனது நண்பர்களுடன் இணைந்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியது உறுதி தெரியவந்தது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.
