பீக்ஹவர் மின்கட்டணம் ரத்து.. திருப்பூரில் திட்டங்களை அறிவித்த விஜய்... 6 கிமீ ரோடு ஷோ ரத்து
திருப்பூர் மாவட்டத்தில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய அக்கட்சி தலைவர் விஜய் வருகை தந்தார். அவர் கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவிநாசி வந்தடைந்தார். அவிநாசி பைபாஸ் அருகில் தவெக தலைவர் விஜய் ரோட் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவிநாசி பைபாசில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை ரோடு ஷோ நடத்திய விஜயின் அணிவகுப்பை காண திரளான தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் உற்சாக வரவேற்புக்கு பின்னர் அங்கிருந்து பெருமாநல்லூர் நால்ரோட்டுக்கு தனது பிரசார வாகனத்தில் விஜய் வந்தார். அவர் அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். பின்னர் கூடியிருந்த கூட்டத்தில் அவர் பேசியது:
நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்வதற்காக அரசுக்கு சொந்தமான ஒரு உலகளாவிய இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும். மேலும் முக்கிய நகரங்களில் வெற்றி தறி விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.
இரண்டாவது, நிலையற்ற நூல் விலை மற்றும் மின்சார நெருக்கடி சுமையை பகிர்ந்து கொள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு முப்பதாயிரம் ரூபாய் வங்கி மூலம் நேரடியாக நமது டிவிகே அரசு வழங்கும்.
மூன்றாவது, கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 500 யூனிட்டுகளாகவும், விசைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 1500 யூனிட்டுகளாகவும் உயர்த்தப்படும்.
மூன்றாவது, கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 500 யூனிட்டுகளாகவும், விசைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 1500 யூனிட்டுகளாகவும் உயர்த்தப்படும்.
அடுத்தது, நெசவாளர்களின் உற்பத்தி செலவுகளை குறைப்பதற்காக அவர்கள் வழங்கும் நூல், சாயங்கள் மற்றும் ரசாயனங்களுக்கு நம்ம டிவிகே அரசால் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
அடுத்து, நம்ம டிவிகே அரசால் அனைத்து நெசவாளர்களுக்கும் ரூபாய் பத்து லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். மேலும் நெசவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் மாதம் 3000 ரூபாயாக உயர்த்தப்படும்.
ஒரு சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களின் வளர்ச்சி லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குகிற துறைகளில் ஒன்றுதான் இந்த எம்எஸ்எம்பீஸ்
இந்தியாவிலே அதிகமாக எம்எஸ்எம்பீஸ் இருக்கிற மாநிலங்களிலே நம்ம தமிழ்நாடும் ஒன்னு. ஆனா இப்படிப்பட்ட பெருமைக்கு மிகப் பெருமை சேர்த்தது யார் தெரியுமா? இந்தியாவிலேயே அதிகமான எம்எஸ்எம்பீஸ் நிறுவனங்கள் மூடப்பட்டதில் தமிழ்நாடு தான் இரண்டாவது மாநிலம். இந்த பெருமையை உண்டாக்கினது தான் திமுக ஆட்சியின் மிகப்பெரிய சாதனை. இப்போ இந்த குறு சிறு, நடுத்தர தொழிலாளர்களின் வளர்ச்சிக்காக நம்ம டிவிகே அரசு என்னவெல்லாம் செய்யும் என்று கொஞ்சம் பார்க்கலாம்.
முதலில், நெருக்கடியில் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ரூபாய் 15,000 கோடி ஸ்டேட் கிரெடிட் கேரண்டி ஃபண்டு உருவாக்கப்படும்.
இரண்டாவது, குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படுவதற்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்று 400 விழுக்காட்டுக்கு மேல உயர்ந்துள்ள பீக் ஹவர்ஸ் மின் கட்டணம். இது குறிப்பாக ஜவுளித்துறையில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதித்துள்ளது. குரு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான எம்எஸ்எம்பீஎஸ் இந்த பீக்ஹவர்ஸ் மின் கட்டணத்தை நமது டிவிகே அரசு நிறுத்தி வைக்கும். விரிவான ஆய்வுக்குப் பிறகு மின் கட்டணத்தை முறைப்படுத்தும். மேலும் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு 100% மின்சார வரி விலக்கு பெறும்.
அடுத்தது, குரு சிறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உலக அளவில் போட்டி போடுவதை உறுதி செய்வதற்காக அவற்றை நவீனமயமாக்க ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 50 லட்சம் வரை என்ற அளவில் 35 சதவீதம் நேரடி மூலதன மானியத்தை நமது டிவிகே அரசு வழங்கும்.
அடுத்து, நம்ம எல்லோருக்கும் சோறு போடும் நமது தெய்வங்களான விவசாயிகளுக்கான அஜெண்டாவை கொஞ்சம் படிப்போமா...
ஐந்து ஏக்கருக்கு குறைவான விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.
அடுத்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எம்எஸ்பி சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்படும்.
நெல்லுக்கு ஒரு குவின்டாலுக்கு 3500 ரூபாயும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும்.
உழவர்களின் தோழன் திட்டத்தின் படி குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் அவரது நேரடி முதலீட்டு ஆதரவு தொகையாக வழங்கப்படும்.
100% காப்பீடு திட்டத்தின் படி பயிர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
கடைசியாக நமது அரசு ஊழியர்கள் நலன். அரசு ஊழியர்களின் நலனுக்காக பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் வழங்குவது குறித்து நமது டிவிகே அரசு கனிவுடன் பரிசீலித்து மதிப்பீடு செய்யும். அடுத்தது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தொடர்ச்சியாக அரசு பணியை நிறைவு செய்துள்ள அனைத்து தற்காலிக ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் எழுத்தர் பணியாளர்களை நம்ம டிவிகே அரசு பணி நிரந்தரம் செய்யும். மூன்றாவது, பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாச்சாரத்தை நமது டிவிகே அரசு முடிவுக்கு கொண்டு வரும். அனைத்து அரசு ஊழியர்களின் இடம் மாற்றங்களும் வெளிப்படையான மற்றும் காலவரையறைக்கு உட்பட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.
நாலாவது, காவலர்களின் அடிப்படை மாதாந்திர ஊதியத்தை 18,200 இல் இருந்து 25 ஆயிரமாக நமது டிவிகே அரசு உயர்த்தும்.
அதிக மன அழுத்தம் உள்ள பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு பணிப்படியாக மாதம் ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்.
காவலர் நலன் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டத்தை நமது டிவிகே அரசு இயற்றும். அச்சட்டத்தின் படி காவலர்களின் பணி நேரங்கள் முறைப்படுத்தப்படும். அதிக பணி சுமை கொண்ட காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு சுழற்சி முறை விடுமுறை உறுதி செய்யப்படும். சலவைப்படியை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். மேலும் மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் காவலர் நல மருத்துவமனைகள் நமது டிவிகே அரசு நிறுவும். கடைசியாக, பெண் காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு நெறிமுறை அல்லது பாதுகாப்பு பணிகளுக்கு பணி அமர்த்தப்பட மாட்டார்கள். பெண் காவல்துறை பணியாளர்களுக்கு என தனி ஓய்றைகளும் நடமாடும் டாய்லெட் யூனிட்டுகளும் அமைக்கப்படும்.
நீங்க எல்லாரும் இந்த விஜய்யை 100 சதவீதம் நம்பலாம். நான் உங்களுக்காக மட்டும் தான் வந்திருக்கிறேன். உங்களுக்காக நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டுமே வந்திருக்கிறேன். பொய் வாக்குறுதி கொடுத்து உங்களை நான் ஏமாற்ற மாட்டேன். அதனால உங்க அண்ணனுக்கு, உங்க தம்பிக்கு, உங்க மகனுக்கு, உங்க புள்ளைக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க, தயவுசெய்து விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க. இது ஒரு விசில் புரட்சி தேர்தலாக இருக்கணும். காண்பிடன்டாக இருங்கள். நல்லதே நடக்கும்.இவ்வாறு விஜய் பேசினார். விஜய்க்கு கே.ஏ.செங்கோட்டையன் வீரவாள் பரிசாக வழங்கினார். திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளர் பாலமுருகன் வேல் வழங்கினார்.
பெருமாநல்லூர் நிகழ்ச்சி முடிந்தத்தும் பூலுவபட்டி நால்ரோடு வரையிலான 6 கிமீ தூரம் விஜய் ரோடு ஷோ நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த 6 கி.மீ.,தூரத்துக்கும் ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர். ஆனால் ஷோ ரத்து செய்யப்பட்டது. இதனால் விஜய் மீண்டும் சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலை வழியாக கோவை புறப்பட்டார். இதனால் பூலுவபட்டி நால் ரோடு, பாண்டியன். நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரோடு முழுவதும் திரண்டு இருந்த பொதுமக்கள், பெண்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து அங்கிருந்த பெண்கள் பேசுகையில், மணிக்கணக்கில் காத்திருந்தும் விஜய் பார்க்காதது ஏமாற்றம் தான் என்றும் ஆனாலும் தங்கள் ஓட்டு த வெ க கட்சிக்குத்தான் என்றும் அவர் முதல்வரானால் பெண்களுக்கு நல்லது செய்வார் என்றும் தெரிவித்தனர். ஒரு சிலர் ஏமாற்றத்தில் கண்ணீருடன் விஜய்க்குத்கான் தங்கள் ஆதரவு என தெரிவித்தனர்
விஜய் நிகழ்ச்சிக்காக திருப்பூர் மாவட்டத்தில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


