ஏடிஎம்-ல் உதவி செய்வது போல் நடித்து ரூ.3.75 லட்சம் மோசடி செய்த நபர் கைது!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு தெருவில் உள்ள ஏடிஎம் மையத்தில், 70 வயது முதியவருக்கு பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து, அவரது ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 19.05.2026 அன்று நடந்த இந்த சம்பவத்தில், அடையாளம் தெரியாத நபர் முதியவருக்கு பயனற்ற ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு, அவரது உண்மையான ஏடிஎம் கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கிலிருந்து ரூ.3,75,000 பணத்தை எடுத்துள்ளார்.
இதுகுறித்து முதியவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், சிவகாசியைச் சேர்ந்த மாரிமுத்து (41) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.90,000 ரொக்கம், புதிய தொலைக்காட்சி பெட்டி மற்றும் ஒரு கைபேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஏடிஎம் மையங்களில் தெரியாத நபர்களின் உதவியை பெறும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
