சிஐடியு முயற்சியால் வ.உ.சி துறைமுக கேண்டீன் தொழிலாளர்கள் 56பணி நிரந்தரம்.!

தூத்துக்குடி வ.உசிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் உணவு விடுதி ஊழியர்கள் 56 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவின்படி பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பை துறைமுக நிர்வாகம் இன்று 6.07.26 அன்று வெளியிட்டுள்ளது. 

தற்போது பணியில் உள்ள 6 தொழிலாளர்கள் உள்ளிட்டு 56 தொழிலாளர்களை 28.07.1998 முதல் பணி நிரந்தரம் செய்து துறைமுக ஊழியர்களுக்கான சம்பளம், பென்சன் உள்ளிட்ட ஓய்வூதிய உரிமைகளை வழங்குவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கொண்டாடும் நோக்கில் துறைமுக குடியிருப்பில் உள்ள ஜனநாயக ஊழியர் சங்க அலுவலகத்தில் வழக்கால் பலனடைந்த 56 தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று சங்க தலைவர்களுக்கும், கடின நாட்களில் துணை நின்ற நீர்வழி போக்குவரத்து சம்மேளனம் மற்றும் சிஐடியு மாவட்டக்குழுவிற்கும் உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து துறைமுக ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் உற்சாகமாக வெற்றியை கொண்டாடியதுடன் நிரத்தரப்படுத்தும் உத்தரவு பிறப்பித்த துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்தகுமார் புரோகித் IRSEE, துணைத்தலைவர் ராஜேஷ் சவுந்திரராஜன் IAS, துறைமுக ஆணைய செயலாளர் மோகன்குமார், துறைமுக கேன்டீன் கமிட்டி தலைவரும் தலைமை இயந்திரவியல் பொறியாளருமான கணேசன், நிதித்துறை தலைமை அலுவலர் மற்றும் நிதி ஆலோசகர் புரோபல் மித்ரா உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளையும், துணைநின்ற துறைமுக ஊழியர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தூத்துக்குடி துறைமுக கட்டுமான பணிகள் துவங்கி துறைமுகம் இயங்க தொடங்கிய 1970 களில் துவக்கப்பட்ட துறைமுக கேண்டீனில் பணிசெய்து வந்த தொழிலாளர்கள் பணி நிரந்தர கனவு தகர்ந்த நிலையில் 1998 ஜூலை மாதம் துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கத்தின் அப்போதைய பொதுச்செயலாளர் பி.சம்பத் பெயரில் 56 கேண்டீன் ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களை தூத்துக்குடி தறைமுகசபையின் நிரந்தர ஊழியர்களாக அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர். 6 ஆண்டு காலம் நடைபெற்ற வழக்கில் அனைத்து ஊழியர்களையும் நிரந்தர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், முன் தேதியிட்டு துறைமுக ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்று நீதியரசர் சிவசுப்பிரமணியம் 2004 ல் தீர்ப்பளித்தார். தீர்ப்பை எதிர்த்து துறைமுக நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டில் தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தும், வழக்கை தள்ளுபடி செய்தும் இரு நீதிபதிகள் அமர்வு 2007 ல் உத்தரவு பிறப்பித்தது.

உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு அமர்வின் உத்தரவை எதிர்த்து ஜனநாயக ஊழியர் சங்கம் அப்போதைய பொதுச்செயலாளர் க.கனகராஜ் மூலம் மின் ஊழியர் மத்திய அமைப்பின பொதுச்செயலாளர் எஸ்.பஞ்சரத்தினம் துணையோடு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரிதீப் பயஸ் மூத்த வழக்கறிஞர் நிகில் நய்யார் துணையோடு நடத்தினார். 13 ஆண்டு கால விசாரணைக்கு பிறகு வழக்கின் இரு தரப்பினரும் பல்வேறு புதிய ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர் என்ற காரணத்தைக் கூறி உச்சநீதிமன்றம் சென்னை உயாநீதிமன்றத்துக்கு 2019-ல் திருப்பி அனுப்பி விட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாம் சுற்றில் வழக்கை தாக்கல் செய்யும் பணி கொரோனா பரவல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.ரசல் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஜாய் கோஷ் தலைமையிலான குழுவினர் உதவியுடன் மீண்டும் வழக்கை தாக்கல் செய்தார். நான்காண்டுகள் நடைபெற்ற வழக்கில் மூத்த வழக்கறிஞர் வைகை பங்கேற்று வாதாடினார். 2024 பிப்ரவரி மாதம் நீதியரசர் குமரேஷ்பாபு 1998 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மனுதாரர்கள் 56 பேரையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்படும் நாளில் இருந்து துறைமுக தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அரியர்சுடன் நிதிப்பலன்கள் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து துறைமுக நிர்வாகம் உயர்நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்தது. தீர்ப்பில் 1998 க்கு பின்னர் சேர்ந்த 13 தொழிலாளர்கள் நிரந்தரம் குறித்தும், தொழிலாளர்களது 1998 க்கு முந்தைய சர்வீசை எடுத்துக் கொள்வது குறித்தும் எதுவும் சொல்லாததும், வழக்கு தொடுக்கப்பட்ட நாளில் இருந்து அரியர்ஸ் வழங்க வேண்டும் என்று கோரியும் ஜனநாயக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கே.காசி மேல்முறையீடு செய்தார். இதன் மீது நடைபெற்ற விசாரணைகளில் வழக்கறிஞர் அஜாய் கோஷ் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் நீதியரசர்கள் எம்.எஸ்.ரமேஷ், சக்திவேல் அமர்வு அளித்த தீர்ப்பில் தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பின் நகல் கிடைத்த நான்கு வாரங்களுக்குள் அமுல்படுத்த உத்தரவிட்டு மேல்முறையீடுகளை தள்ளுபடி செய்தனர்.

தீர்ப்பின் நகலை பெற்றுக் கொண்ட துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க தலைவர்கள் துறைமுக நிர்வாகத்தை சந்தித்து அமுல்படுத்த கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து துறைமுக ஆணைய போர்டில் சிஐடியு பிரதிநிதி எஸ்.பாலகிருஷ்ணன் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த தொடர்ந்து வலியுறுத்தினார். சக உறுப்பினர் சத்யநாராயணன் ஆதரவு தெரிவித்தார். அதனை தொடர்ந்து கேண்டீன் ஊழியர்களை நிரந்தரப்படுத்தும் பணிகளை துவக்கிய நிர்வாகம் தற்போது நிரந்தரம் செய்வதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. இது தொழிலாளர்கள் மத்தியில் மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி