மாதா கோவில் திருவிழா பொருட்காட்சி : "தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடத்துவது பாதுகாப்பற்றது" - முதலமைச்சருக்கு புகார் மனு.!
தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய திருவிழாவின்போது செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளி சவேரியானா விளையாட்டு மைதானத்தில் பொருட்காட்சி நடத்துவதில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளதால் மாற்று இடத்தில் நடத்த உத்தரவு வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு மனு அளித்துள்ளனர்
இது குறித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில்: -
"தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட உலகப் பிரசித்தி பெற்ற பரிசுத்த பனிமய அன்னை பேராலய (மாதா கோயில்) திருவிழா **ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5, 2026 வரை நடைபெற உள்ளது.
இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாக, மாதா கோயிலுக்கு அருகில் சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள அரசு உதவி பெறும் செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியின் சவேரியானா விளையாட்டு மைதானத்தில் பொருட்காட்சி நடைபெறுவதாக அறிய வருகிறது. இந்த மைதானம் சுமார் 40 லட்ச ரூபாய் வாடகைக்கு தனியார் நபர்களுக்கு விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த இடத்தில் பின்வரும் கடுமையான பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளன:
1. மைதானத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் 20 அடி அகலம் கொண்ட ஒரே பாதை மட்டுமேஉள்ளது. உள்ளே செல்லும் வழியும் வெளியே வரும் வழியும் ஒரே பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. அவசரகாலத்தில் மக்களை வெளியேற்றுவதற்கு வேறு எந்தப் பாதையும் இல்லை.
2. மைதானத்தின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் ஆள் உயர சாக்கடை கால்வாய்கள் உள்ளன. இவை கடலுக்குச் செல்லும் வழியாக அமைந்துள்ளன. இங்கு மக்களுக்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை.
3. பள்ளி நிர்வாகம் தங்கள் மாணவர்கள் மற்றும் பகுதி இளைஞர்களுக்கு கால்பந்து விளையாட அனுமதி அளிப்பதில்லை. ஆனால் பணம் வரும் போது மட்டும் வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறது.
இதுவரை எந்தப் பெரிய சம்பவமும் நடைபெறவில்லை என்பது உண்மைதான். ஆனால் ஆண்டுக்கு ஆண்டு திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே பாதுகாப்பு அம்சங்கள் மிக முக்கியமானவை.
எங்கள் கோரிக்கை: பொருட்காட்சியை நடத்த வேண்டாம் எனக் கூறவில்லை. ஆனால் மக்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ள வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்றி நடத்த அனுமதி வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு: இந்தப் பொருட்காட்சியை இரண்டு தனிநபர்கள் (தனியார்) நடத்துகின்றனர். ஆனால் மாதா கோயில் பெயரைப் பயன்படுத்தி, மாதா கோயில் நடத்துவதாகத் தவறான பிம்பத்தை உருவாக்குகின்றனர். தேவைப்பட்டால் மாதா கோயில் பங்குத் தந்தையிடம் விசாரித்து உறுதிப்படுத்தலாம்.
கரூர் போன்ற துயர சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க, தீயணைப்புத் துறை, காவல் துறை, மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் இணைந்து உடனடியாக ஆய்வு செய்து, தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
புகார் மனுவின் நகலை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர்.
