ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரத்தை தூண்டியவர்கள் யார்? விசாரணை நடத்த கோரிக்கை!
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரத்தை தூண்டியவர்கள் யார் என்று விசாரணை நடத்த வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "1996-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் வேதாந்தா நிறுவனம் தொடங்கப்பட்டு உற்பத்தியை நடத்தி வந்தது. ஸ்டெர்லைட் ஆலையினால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று பல கட்டங்களாக போராட்டங்களும், வழக்குகளும் தொடர்ந்து மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது.
இதன் தொடர்ச்சியாக 2017- வருடம் ஸ்டெர்லைட் விரிவாக்கம் செய்யப்படுகிறது என்ற செய்தி கேட்டு பொதுமக்கள் ஸ்டெர்லைட் வரிவாக்கத்திற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினார்கள்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத்திற்குட்பட்ட ஸ்டெர்லைட் அருகில் உள்ள குமாரெட்டியாபுரம் கிராமத்தில் மக்கள் போராட்டத்தை துவங்கினார்கள். இந்த போராட்டத்திற்கு பல அரசியில் கட்சியினர் சமூக செயற்பாட்டார்கள் என பலதரப்பட்ட மக்கள் ஆதரவு தெரிவித்து வந்தார்கள்.
இந்த போராட்டம் பல ஊர்களில் போராட்ட வடிவங்களை மாற்றி நடைபெற்று வந்தது. இந்த போராட்டம் நூறு நாட்களை எட்டிய சூழ்நிலையில் 100வது நளாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுப்பதாக மக்கள் தன்னெழுச்சியாகவும் ஒரு சில போராட்டா குழுக்களின் தலைமையிலும் சென்றார்கள். அப்போது மிகப்பெரிய கலவரம் வெடித்தது பொதுமக்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடத்துவங்கினார்கள்.
காவல்துறை தடியடி நடத்தியும், துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தியும் போராட்டத்தை கலைத்தனர். 13 பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார்கள். 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு கை, கால்கள் உடைந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. பல வாகளங்கள் உடைக்கப்பட்டது. பல இளைஞர்கள் பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்டு இன்னும் வழக்குகளை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள்.
100 நாட்கள் அமைதியான முறையில் குமாரெட்டியாபுரம் ஊரில் மற்றும் பல கிராமங்களில் பல பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டம் நடந்த போது ஏற்படாத கலவரம் எப்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற போது கலவரம் வெடித்தது. இந்த கலவலத்தை திட்டமிட்டு யாராவது ஏற்படுத்தினார்களா அல்லது காவல்துறை பிரச்சனையை உருவாக்கினர்களா என்ற மர்மம் இதுவரை அவிழ்க்கப்படாமல் இருக்கிறது.
குடும்பம், குடும்பமாக தண்ணீர் பாட்டில்களோடு, உணவு பொட்டலங்களோடு மிகவும் அமைதியான முறையில் சென்ற போராட்டம் கலவரமாக வெடித்ததால் 13 பேர் பலிகொடுக்கப்பட்டார்கள். 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குறிவைத்து தாக்கப்பட்டார்கள், வாகனங்கள் திட்டமிட்டே உடைக்கப்பட்டது. இது எல்லாம் யாரால் எப்படி நடந்தது என்று கன்னிதீவு கதையாக கேள்விக் குறிகளோடு ஏழு வருடங்களாக கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
இந்த சம்பங்களை விசாரணை செய்த முன்னால் நீதியரசர் அருணா ஜெகதீசன் காவல்துறை துப்பாக்கி சூட்டிற்கு மர்ம நபர்கள் கலவரத்தை தூண்டியிருப்பதாக தெரிகிறது என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அப்படி என்றால் யார் கலவரத்தை தூண்டினார்கள்? தமிழக அரசு ஏன் இதுவரை விசாரிக்காமல் இருக்கிறது.
ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடுவதற்கு இந்த போராட்டத்தை பயன்படுத்தி வேறு எதாவது நிறுவனம் தொழில் போட்டி காரணமாக கலவரத்தை ஏற்படுத்தி நமது சகோதர, சகோதரிகளை துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கினார்களா என்ற பல கேள்விகள் தூத்துக்குடி மக்கள் மத்தியில் பல ஆண்டுகளாக நீருபூத்த நெருப்பாக எழும்பி கொண்டே இருக்கிறது.
ஆகையால் தமிழ்நாடு அரசு உடனடியாக அமையான முறையில் சென்ற பொதுமக்கள் மீது சுட்டது யார்?, சுடச்சொன்னது யார்? சுடப்படுவதற்கு ஏதாவது காரணம் இருக்கிறது? கலவரத்தை தூண்டி அமைதிப் போராட்டத்தை சீர்குலைக்க செய்தது யார்?, துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை மீது எடுத்த உரிய நடவடிக்கை என்ன? ஆகிய கேள்விகளுக்கு விடை கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
