"திருட வந்தால் வீட்ல காசு வைக்க மாட்டீங்களா ? எதற்கு இத்தனை கேமரா? போங்கடா வெண்ணைகளா" - கடுப்பான திருடன்.!
திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜேம்ப்ஸ் பாண்ட். இவர் மதுரையில் வசித்து வருகிற தனது மகளை பார்ப்பதற்காக குடும்பத்தோடு சென்றுள்ளார். அந்த சமயம் பார்த்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், வீட்டிலிருந்த பீரோ மற்றும் பிற பொருட்களை உடைத்து, ஏதேனும் நகை மற்றும் பணம் இருக்கிறதா என தேடிப் பார்த்துள்ளனர்.
ஆனால் வீட்டில் எடுத்து செல்ல ஏதும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன், வீட்டின் உரிமையாளருக்கு 4 பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த கடிதத்தில், ‘வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. அடுத்த தடவை என்னை மாதிரி திருட வந்தால் யாரும் ஏமாற்ற வேண்டாம். காசு வைக்கவும். எதற்கு இத்தனை கேமரா? போங்கடா வெண்ணைகளா...என்னை மன்னித்து விடுங்கள். இப்படிக்கு திருடன்” என்று எழுதியுள்ளார்.
பணம், நகை ஏதும் இல்லாததால், கடைசியாக அங்கிருந்த ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உண்டியலை மட்டும் எடுத்துச் சென்ற திருடன், தான் யார் என்பதை கண்டுபிடித்துவிடக் கூடாது என சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கையும் கழற்றிச் சென்றுள்ளார். மதுரையிலிருந்து வீட்டிற்கு திரும்பிய ஜேம்ஸ் பாண்ட், வீட்டின் பூட்டு மற்றும் பீரோ ஆகியவை உடைந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியான அவர், இதுகுறித்து பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வீட்டை ஆய்வு செய்ததோடு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட சென்ற இடங்களில் திருடர்கள் அசந்து தூங்கி கையும் களவுமாக சிக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில், பணம் இல்லாத விரக்தியில் திருடன் கடிதம் எழுதி வைத்து விட்டு சென்ற சம்பவம் ஒருபுறம் அதிர்ச்சியையும், மறுபுறம் சிரிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.


