நெல்லை: பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி இரட்டை மலை அருகே பொருநை அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். மொத்தம் 13.2 ஏக்கர் பரப்பளவில், 55 ஆயிரம் சதுர அடியில் ரூ.56 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சிகத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது முடிவுற்றுள்ளன. அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது பொருநை நதிக்கரை ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதன்முதலாக நெற்கதிர் குறியீடுடன் கிடைத்த பொருளை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவுப்பரிசாக அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
பொருநை அருங்காட்சியகம் திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூா் காட்சிக்கூடம்-2, சிவகளை காட்சிக்கூடம்-1, கொற்கை காட்சிக்கூடம்-2, நிா்வாக கட்டடம்-1 உள்பட மொத்தம் 7 தொகுதிகளாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
மேலும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பூங்காக்கள், பல்வேறு வசதிகளும் கூடுதலாக சேர்க்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.62 கோடியில் பொருநை அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டது. பழம் பெருமை பேசும் வகையில் வெகு நேர்த்தியாக இயற்கை மாறாமல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொருநை அருங்காட்சியகத்தை நெல்லைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திறந்து வைத் தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை என ஒவ்வொரு தொகுதிகளாக சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அகழாய்வின் போது பொருட்களை கிடைத்த ஒவ்வொரு தொகுதிகளி லும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரசித்து பார்வையிட்டு வியந்தார். 5ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை பயன்படுத்திய மனிதன், அதை காட்சிப்படுத்தியுள்ள விதம் முதல்வரை பெரிதும் கவர்ந்தது. ஒவ்வொரு அரங்கிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த தொல்பொருட்களின் விபரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.
முதல்வர் திறந்து வைத்ததை முன்னிட்டு பொருநை அருங்காட்சியகம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. அந்த பகுதியே விழாக் கோலம் பூண்டிருந்தது.
தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமாக உருவாகியுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று இரவு திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள ஒவ்வொரு காட்சியகம், திரையரங்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் பேட்டரி கார் மூலம் சுற்றி பார்த்தார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ, வேலு ஆகியோர் அருங்காட்சியத்தை விளக்கினர். சுமார் 2 மணி நேரம் அருங்காட்சியகத்தில் முதல்வர் செலவிட்டார்.
