தூத்துக்குடி : குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு.!
தூத்துக்குடியில் கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள கீதாஜீவன் நகரைச் சேர்ந்த கதிரேசன் மகன் முகேந்திரன் (12), அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 7ஆம் வகுப்பும், ஜாகிர் உசேன் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் நரேன் ஸ்ரீ கார்த்திக் (13) 8ஆம் வகுப்பும் படித்து வந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த வனராஜ் மகன் திருமணி (14 ) தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் திங்கள்கிழமை குடியரசு தினத்தை ஒட்டி பள்ளி விடுமுறை என்பதால், இவர்களுடன் சேர்த்து மொத்தம் 9 பேர் வீட்டில் கபடி விளையாடச் செல்வதாக கூறிவிட்டு, தாளமுத்து நகர், சிலுவைபட்டி மிக அருகே உள்ள மொட்டை கோபுரம் கடல் பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது கடலில் ராட்சத அலை எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அருகில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் வெளியில் வந்து விட்டனராம். ஆனால் ஆழமான பகுதிக்கு சென்ற 4 பேர் சிக்கிய நிலையில், ஒரு மாணவரை அப்பகுதியில் நின்ற மீனவர் உடனடியாக மீட்டு உள்ளார். மற்ற மூன்று பேரும் திரும்பி வர முடியாமல் கடலில் தத்தளித்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மாணவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
